எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர் பணிகள் தொடங்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம், எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய தேர் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய தேர் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில், அறுபடை வீடுகளுக்கு இணையாக கருதப்படும் முருகன் கோயிலாகும்.  சோழவளநாட்டில் முதலாம் ராஜராஜசோழனால் பெயர் சூட்டப்பெற்றதும், சிம்மவர்ம மன்னனுக்கு ஆறுமுகத்தோடு எழுந்தருளி வேலவன் காட்சியளித்ததும், சில்ப்ப முனிவர் இழந்த கட்டை விரலையும், இரு கண்களையும் முருகன் அருளால் பெற்றதும், அவர் சித்தராகி அடங்கியதும், அருணகிரிநாதரால் பெரிதும் சிறப்பிக்கப் பெற்றதும், முருகன் பன்னிருகரத்தோடு மயில்மேல் அமர்ந்து வள்ளி தேவசேனா சமேதராய் காட்சியளிக்கும் சிறப்புகளைப் பெற்றதும் எண்கண் கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசப் பெருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.  ஆனால், இங்குள்ள மிகப் பழைமையான தேர் முழுவதுமாக சிதிலமடைந்துவிட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சப்பரம் எனும் தேர் சவுக்கு மற்றும் மூங்கில் மரங்களைக் கொண்டு தாற்காலிக தேரில்தான் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
புதிய தேர் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் உள் பிராகாரத்தில் பூஜையுடன் தொடங்கியதோடு, கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் புதிய தேர் கட்டும் பணிக்காக அரசு ரூ. 10 லட்சம் ஒதுக்கியது. மேலும், உபயதாரர்கள் மூலம் தேர் உருவாக்கும் பணியைத் தொடங்க முடிவெடுத்து, கோயில் நிர்வாகம் பணிகளைத் தொடங்கிய நிலையில் அப்பணியும் கிடப்பில் கிடக்கிறது.
இதுகுறித்து எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் ராஜராஜேஸ்வரனிடம் கேட்டபோது, அவர் கூறியது:
அரசு தேர் உருவாக்கும் பணிக்காக ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியது. அந்த பணத்தில் தேர் சக்கரம், திருச்சி பெல் நிறுவனத்தாரால் செய்யப்பட்டது. மீதியுள்ள பணத்தில் தேர் சீலை, தேர் மூடி வைப்பதற்கான மேற்கூரை அமைக்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர் செய்யும் பணியை உபயதாரர்கள், பக்தர்கள் நிதி உதவியோடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
தேரின் சக்கரம் செய்யப்பட்டு, எண்கண் கீழவீதியில் தேரடியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தேர் கட்டும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பக்தர்களிடையே உள்ளது.
எனவே, புதிய தேர் செய்யும் பணிகளை உடனடியாக தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும், கோயில் நிர்வாகமும், இந்து 
சமய அறநிலையத்துறையும் செய்ய வேண்டும், புதிதாக செய்யப்பட்ட தேரில் சுப்பிரமணிய சுவாமி வலம் வர வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com