ரயில் கழிவுப் பொருள்கள் விற்பனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

ரயில் கழிவுப் பொருள்கள் விற்பனையை  ரயில்வே வாரியம் தீவிரப்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

ரயில் கழிவுப் பொருள்கள் விற்பனையை  ரயில்வே வாரியம் தீவிரப்படுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நீடாமங்கலத்தில் அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 2016-17-ஆம் நிதியாண்டு கழிவுப் பொருள்கள் ஏலத்தில் விற்று ரூ. 2,702 கோடி ரயில்வே நிதி திரட்டியது. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை விற்றது ரூ.22 கோடி, தெற்கு ரயில்வே விற்றது ரூ. 199. 67 கோடி. இதற்கு முந்தைய 2015-16-ஆம் நிதியாண்டு இதைவிட ரூ. 40 கோடி கூடுதலாக ரூ. 239.75 கோடிக்கு தெற்கு ரயில்வே விற்பனை செய்திருந்தது. 
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் 1,06,423 மெட்ரிக் டன் இரும்புக் கழிவுகளும், 1,397 மெட்ரிக்  டன் இரும்பு அல்லாத கழிவுப் பொருள்களும் தேங்கிக் கிடக்கின்றன. அதிகளவாக பிகாரில் 16,237 மெட்ரிக் டன்னும், மகாராஷ்டிரத்தில் 13,629 மெட்ரிக் டன்னும் உள்ளது. 
பெரம்பூர் ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலையில் 896 மெட்ரிக் டன், தெற்கு ரயில்வேயின் தமிழகப் பகுதிகளில் 2,864 மெட்ரிக் டன் மற்றும் கேரளப் பகுதிகளில் 2,291 மெட்ரிக் டன் இரும்புக் கழிவுகள் தற்போது உள்ளன. தவிர 72 மெட்ரிக் டன் தென் மேற்கு ரயில்வே இரும்புக் கழிவுகளும் தமிழகப் பகுதியில் உள்ளது. 
தேங்கிக் கிடக்கும் ரயில்வே கழிவுப் பொருள்களை விற்பதன் மூலம் உடனடி நிதியாக ரூ.3,000 கோடி திரட்ட முடியும். இவற்றை பாதுகாக்கும் சிரமம் குறையும். மேலும், ரயில்வே பூஜ்ய கழிவு தேக்கநிலைத் திட்டம் வெற்றி அடைய வழிவகுக்கும். எனவே,  கழிவுப் பொருள்கள் விற்பனையை  ரயில்வே வாரியம் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com