வர்த்தகப் போட்டியில் சீனாவை விஞ்ச இந்தியா-நேபாளம் ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிப்பது அவசியம்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

வர்த்தகப் போட்டியில் சீனாவை விஞ்ச, இந்திய- நேபாள ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிப்பது அவசியம் என தட்சிண ரயில்வே

வர்த்தகப் போட்டியில் சீனாவை விஞ்ச, இந்திய- நேபாள ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிப்பது அவசியம் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவையும், நேபாளத்தையும் 6 இடங்களில் இணைக்கும் விதமாக 1,317 கி.மீ., தூர மின்சார ரயில் பாதை திட்டத்தை இந்தியத் தொழில்நுட்ப பொருளாதார சேவை நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு முன்பே நேபாளத்துக்கு வழங்கி இருந்தது. 
அதில், 5 இடங்களில் ரயில்பாதை அமைக்கும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதில், பிகார்  மாநிலத்தில் இருந்து நேபாளத்தை இணைக்க 2 திட்டங்கள் போடப்பட்டன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,075 கோடி. 
இந்த சூழலில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் சிகேட்ஸ் என்ற இடத்தில் இருந்து லாடஸ், டிங்கிரி, ஜீராங் வழியாக நேபாள தலைநகர் காத்மாண்டு வரை இமயமலை ரயில்பாதை அமைக்கும் முடிவை நேபாள வெளியுறவு அமைச்சரும், சீன வெளியுறவு அமைச்சரும் கடந்த மே 7-ஆம்  தேதி பீஜிங்கில் சந்தித்துக் கூட்டாக அறிவித்தார்கள். சுற்றுலா மற்றும் சரக்கு வர்த்தகத்தைக் குறிவைத்து இந்த பாதையை ஜீராங் கணவாய் மற்றும் திபெத்திய பீடபூமி வழியாக சீனா அமைக்கிறது. 
இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய- நேபாள ரயில்பாதை திட்டங்களைத் துரிதப்படுத்தும் வகையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி காத்மாண்டுவில் இரு நாட்டு அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்ந்தது.
பிகாரில் உள்ள ராக்ஸல் நகரில் இருந்து காத்மாண்டு வரை ரயில்பாதை அமைக்க தேவையான  தொழில்நுட்ப, போக்குவரத்து ஆய்வை விரைந்து முடிப்பது, இணைப்பு ரயில் பாதை திட்டங்களை துரிதப்படுத்துவது, ரயில் திட்டங்களுக்கு பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது என கூட்டாக முடிவு எடுக்கப்பட்டது.
நேபாளம் அனைத்து தேவைகளுக்கும் மற்ற நாடுகளில் இருந்து வரும் சரக்கு போக்குவரத்தை நம்பியுள்ள ஒரு மலை நாடு. ரயில் பாதைகள் மூலம் இந்த நாட்டை இணைத்தால், நேபாளத்துக்கான 40 சதவீத சரக்கு போக்குவரத்து வர்த்தகம் இந்திய ரயில்வே வசம் கைமாறும். நேபாளத்துக்கான வர்த்தகப் போட்டியில் சீனாவை விஞ்ச, இந்திய- நேபாள ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிப்பது அவசியம் என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com