ஒரே பிரசவத்தில் நோய் தாக்குதலுடன் பிறந்த 3 குழந்தைகள்: 21 நாள் சிகிச்சையில் மூவரும் நலம்

திருவாரூர் அருகே ஒரே பிரசவத்தில் நோய்த் தாக்குதலுடன் பிறந்த 3 குழந்தைகளுக்கும் 21 நாள்கள் நவீன சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளன.

திருவாரூர் அருகே ஒரே பிரசவத்தில் நோய்த் தாக்குதலுடன் பிறந்த 3 குழந்தைகளுக்கும் 21 நாள்கள் நவீன சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளன.
திருவாரூர் அருகே மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி பிரியதர்ஷினி (25). இவர் கருவுற்றபோது 3 குழந்தைகள் கண்டறியப்பட்டதால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அங்கு மே 17-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். 8 மாதம் கருவுற்று இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மே 22-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 3 குழந்தைகள் பிறந்தன. முதல் பெண் குழந்தை 1.320 கிலோவும், 2-ஆவது ஆண் குழந்தை 1.680 கிலோவும், 3-ஆவது பெண் குழந்தை 1.250 கிலோ எடையுடனும் இருந்தன. குழந்தைகள் எடை குறைவாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்ததால், பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
முதல் குழந்தை: 40 வாரம் கருவுறுதலுக்குப் பிறகு பிறக்க வேண்டிய குழந்தைகள் 32 வாரத்தில் பிறந்ததால், முதல் குழந்தை மூச்சு திணறலுடனும், பால்குடிக்க முடியாமலும் ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டும் இருந்தது. அந்த குழந்தைக்கு 3 நாள்கள் செயற்கை சுவாசமும், மஞ்சல் காமாலைக்கு நவீன போட்டோ தெரபி சிகிச்சையும், ரத்த சோகைக்கான ரத்த அணுக்களும் செலுத்தப்பட்டன.
2-ஆவது குழந்தை: மூச்சு திணறல், மஞ்சள் காமாலை நோயுடனும் இருந்ததால் நவீன போட்டோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் ஆக்சிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டது. 
3-ஆவது குழந்தை: மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை, குடல் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டதால் 3 நாள்கள் செயற்கை சுவாசம், போட்டோ தெரபி குடல் ஒவ்வாமை நோய்க்கான மருந்துகள் செலுத்தப்பட்டன. 21 நாள்கள் தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தைகள் தற்போது இயல்பான நிலையில் தாய்ப்பால் எடுத்துக் கொள்ளும் நிலையில் உள்ளன. இரண்டு, மூன்று நாள்களில் குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது: ஒன்றரை கிலோவுக்கும் கீழே எடை உள்ள குழந்தைகள் உடல் நலம் தேறுவதில் அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், இந்த மூன்று குழந்தைகளுக்கும் வெவ்வேறு சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன. இது மருத்துவமனையில் கட்டமைப்பு வசதியை வெளிப்படுத்துகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ. 9 லட்சம் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை முறை, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com