திருவாரூரில் யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி, திருவாரூரில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, திருவாரூரில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருவாரூர் அருகேயுள்ள விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தினத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பங்கேற்றார். நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநர் ஏ. சுகுமார், யோகாசனத்தின் பலன்களையும், மருத்துவ ரீதியான பயன்பாடுகள் குறித்தும் பேசினார். கஸ்தூர்பா காந்தி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் சந்திரா முருகப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கரன், கண்காணிப்பாளர் மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர். புலிவலம் ஊராட்சி சார்பில், புலிவலம் தொடக்கப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ரத்னமாலா, ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையர் கலைச்செல்வன், பள்ளி முதல்வர்கள் புவனேஸ்வரி, தேவகி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மாணவ, மாணவியர் யோகா செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

கட்டிமேடு அரசுப் பள்ளியில்...
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை உலக யோகா தினத்தையொட்டி, மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 
பள்ளித் தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், மனவளக்கலை பேராசிரியர் நா. நேதாஜி பேசியது: யோகா செய்வதன் மூலம் முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலை பெறுவதால் எதையும் சிறப்பாக செய்யும் வகையில் உடலில் ஒத்துழைப்பு கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடியும். மேலும் யோகா உடலுக்கு வலிமை தருவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிப்பதால் சில ஆசனங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மாணவர்களுக்கு மனதை ஒரு முகப்படுத்தும் தன்மை அதிகரித்து கல்வியில் மேம்பாடு அடையமுடியும் என்றார் அவர். பயிற்சியில், கபாலபதி உஜ்ஜயினி, நாடிசுத்தி போன்ற பிராணாயாம முறைகள் மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் செ. முகுந்தன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மன்னார்குடி பள்ளிகளில்...
சர்வதேச யோகா தினத்தையொட்டி, மன்னார்குடியில் பள்ளிகளில் யோகா தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் (ஜூன் 20) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இங்கு, மன்னார்குடி ஈஷா யோகா மைய பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு என்எஸ்எஸ் மாணவர்களுக்கு ஆரோக்கியம் தரும் யோகா என்ற தலைப்பில் நாடிசுத்தி மூச்சுப் பயிற்சி, நாதயோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சியை அளித்தனர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
8-ஆவது பட்டாலியன் ராணுவப் படை சார்பில் வியாழக்கிழமை தேசியப் பள்ளி வளாகத்தில் மன்னார்குடி அரசுக் கல்லூரி,பின்லே மேல்நிலைப் பள்ளி, தேசிய மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றின் தேசிய மாணவர் படையை சேர்ந்த 150 மாணவர்களுக்கு மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியர்கள் கைலாசம், கோதண்டபாணி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். யோகா குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை சுபைதார் ஜெயசீலன் வழங்கினார். 
இதேபோல், தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஜெபமாலை தலைமை வகித்தார். இதில், பக்தி, ஞானம், கர்மா ஆகிய யோகா மற்றும் ஆசனப் பயிற்சியை மாணவியருக்கு உடற்கல்வி ஆசிரியர்  பி. குளோரி பயிற்சி அளித்தார். உப்புக்காரத்தெருவில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில்,ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் கிளைத் தலைவர் வி. அஞ்சறைப்பெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்தார். யோகா ஆசிரியர் இமானுவேல், பள்ளி மாணவ,மாணவியருக்கு யோகா பயிற்சி அளித்தார். உலக யோகா தினம் குறித்து ஜேசிஐ முன்னாள் தலைவர் ஆர்.வெங்கடேஷன் விளக்கம் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com