உவர் நீர் இறால் பண்ணைகள் பதிவுச் சான்று பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூரில் உவர் நீர் இறால் பண்ணைகள் பதிவுச்சான்று பெறவும், உரிமத்தைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் உவர் நீர் இறால் பண்ணைகள் பதிவுச்சான்று பெறவும், உரிமத்தைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளுக்கும் கடல் சார் நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக உரிய பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டத்தின்படி, திருவாரூர் மாவட்டத்தில் எந்த உவர்நீர் இறால் பண்ணைகளும் உரிய பதிவின்றி செயல்படக் கூடாது.
தவறும்பட்சத்தில் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் 154 உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பதிவுச் சான்று 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவுச் சான்று உரிமத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம். மேலும், அரசுப் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் உவர்நீர் இறால் பண்ணை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆணையத்தின் அனுமதியில்லாமல் புதிதாக இறால் பண்ணைகள் அமைக்கக் கூடாது.
மேலும், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக தடை செய்யப்பட்டுள்ள மருத்துவப் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது. சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நல்ல மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தி உவர்நீர் இறால் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக அமைக்கப் பெற்ற உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவுச் சான்றிதழ் பெறவும், ஐந்தாண்டுகள் முடிவுற்ற பதிவுச் சான்று உரிமத்தைப் புதுப்பிக்கவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அளவிலான குழுவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com