திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் "அணையா விளக்குகள்' !

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டையில் காலை பொழுது நன்றாக விடிந்தும் தெரு விளக்குகளை அணைக்காததால் பகலில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டையில் காலை பொழுது நன்றாக விடிந்தும் தெரு விளக்குகளை அணைக்காததால் பகலில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
கிராம ஊராட்சிகளில் தெரு விளக்குகள் மாலை 6 மணிக்கு எரியவிட்டு அதிகாலை பொழுது விடியும் நேரத்தில் அணைக்கப்படும். இதற்கென தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஊராட்சிகளில் பல இடங்களில் தெருவிளக்குகள் முறையாக எரியவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் பல ஊராட்சிகளில் எரியவிட்ட விளக்குகள் பொழுது விடிந்தும் அணைக்கப்படுவதில்லை. உதாரணமாக திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் ஊராட்சியில் புதன்கிழமை பகல் 10 மணி வரையிலும், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு, சங்கேந்தி உள்ளிட்ட ஊராட்சிகளில் மாலை 4 மணி வரை தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருந்தன.
இதுகுறித்து முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, ஆணையர் மற்றும் அலுவலக மேலாளர் ஆய்வுக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதாகவும், இப்பிரிவின் எழுத்தர் மனோகரன் இதுகுறித்து விசாரித்து விளக்குகளை முறையாக அணைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். ஆலங்காடு ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் பகலில் எரிந்து கொண்டிருக்கும் தெருவிளக்கு குறித்து அங்கிருந்த மண்பாண்டத் தொழிலாளி ராமச்சந்திரனிடம் கேட்டபோது, 24 மணி நேரமும் அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது, யாரும் வந்து எரியும் விளக்கை அணைப்பதில்லை என்றார்.
சங்கேந்தி பவுண்டடியில் கடை வைத்திருக்கும் செந்தில்கனி என்பவர் கூறியது: அமாவாசை போன்ற இருட்டு தினங்களில் விளக்கே எரியாத நிலையும் உண்டு. ஆனால், சில சமயங்களில் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இதற்குரிய அலுவலர்கள் இப்பணியில் மெத்தனமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். தமிழகம் மின்மிகை மாநிலமாக இல்லாத நிலையில், அடிக்கடி மின்உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து மின் உற்பத்தி குறைவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலை, நெடும்பலம் கிழக்கு கடற்கரை சாலை, திருக்கொள்ளிக்காடு, திருத்தங்கூர் பகுதிகளில் வியாழக்கிழமை தொடர்ந்தது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜூவிடம் கேட்டபோது, மின்சிக்கனம் குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, தெரு விளக்குகள் பகலில் எரிவது குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றார் அவர்.
ஒரு யூனிட் மின்சாரத்தை சேமித்தால் அது இரண்டு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு சமம். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தெருவிளக்குகள் பராமரிப்பது, இயக்குவது போன்றவற்றில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில் மின்பயன்பாட்டாளர்கள் அதிகளவில் மின்சாரத்தை கூடுதலாக பயன்படுத்தும் சூழலில் மின்தடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இச்சூழலை கருத்தில் கொண்டு , மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com