திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை அருகே கரையைக் கடந்த கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

நாகை அருகே கரையைக் கடந்த கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 வங்கக் கடலில் உருவான கஜா புயல், நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடக்க உள்ளது என உறுதியான தகவல்களைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. போலீஸார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 
 வியாழக்கிழமை பகலில் சாதாரண நிலையில் இருந்த வானிலை, மாலைக்குப் பிறகு மாறியது. பின்னர், மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடி இருந்தது. குறிப்பாக, கடற்கரையோரத்தை ஒட்டியுள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் அதிக மழை பெய்தபடி இருந்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் தாழ்வான மற்றும் குடிசைகளில் வசிக்கக்கூடிய மக்கள் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன. அத்துடன் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்பட்டது. 
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கஜா புயலானது கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்ததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. 
மாவட்டம் முழுவதும் 7500 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலையில் 6 மணிக்கு போலீஸார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இந்த பணிகளை தொடங்கினர். நாகை தஞ்சை நெடுஞ்சாலையில் விழுந்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்த மரங்கள் முதலில் அகற்றப்பட்டன. பின்னர் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன.  
இருப்பினும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துக்காக வந்த பயணிகள் காத்திருக்க நேரிட்டது. தனியார் வேன்கள் மற்றும் ஆட்டோக்களில் மக்கள் பயணித்தனர். பிற்பகலுக்கு பிறகு ஒருசில பேருந்துகள் இயங்கத் தொடங்கின.  
மேலும் சேதமடைந்த வீடுகள், கால்நடைகள், இதர பயிரினங்களின் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பிறகே அதன் துல்லிய மதிப்பீடு தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நிவாரண முகாம்கள்: திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் 78 முகாம்களில் 41,256 ஆண்கள், 57,288 பெண்கள், 5616 குழந்தைகள் என மொத்தம் 10,4160 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மன்னார்குடியில் 32 முகாம்களில் 3,327 பேர், கூத்தாநல்லூரில் 24 முகாம்களில் 1,077 பேர், வலங்கைமானில் 21 முகாம்களில் 1,101 பேர், திருவாரூரில் 17 முகாம்களில் 984 பேர், நீடாமங்கலத்தில் 13 முகாம்களில் 718 பேர், குடவாசலில் 9 முகாம்களில் 225 பேர், நன்னிலத்தில் 8 முகாம்களில் 200 பேர் என மொத்தம் 1,11,792 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென 60 மருத்துவ முகாம்களும் செயல்படுகின்றன.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com