மின் பாதிப்பு சீரமைப்பு பணியில் வெளிமாவட்ட ஊழியர்கள்: அமைச்சர் ஆர். காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் மின்பாதிப்பு சீரமைப்பு பணியில் வெளி மாவட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.

திருவாரூர் மாவட்டத்தில் மின்பாதிப்பு சீரமைப்பு பணியில் வெளி மாவட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு காலை உணவு வழங்கிய பின் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கிய கஜா புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும். கஜா புயல் உருவாகியிருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டவுடன், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 190 புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் பேருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. 
தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு வருவதுடன், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, உணவுத் துறை என அனைத்து துறைகளின் அலுவலர்கள் முழு மூச்சுடன் மீட்பு, உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த் துறையின் பேரிடர் மீட்பு படையினர் தீவிரப் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அதை சீரமைக்க மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் இணைந்து வெளிமாவட்ட மின் தொழிலாளர்களும் சீரமைப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை) காலை என்னுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவிக்குமாறு கூறினார். புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்காக உதவிட மற்ற துறைகளின் அலுவலர்கள், ஊழியர்களை ஈடுபடுத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
மற்ற மாவட்டங்களிலிருந்து மாலைக்குள் அலுவலர்கள், தொழிலாளர்கள் வந்துவிடுவார்கள் என அமைச்சர்களும் உறுதி அளித்துள்ளனர். எனவே, புயல் பாதிப்பு மீட்புப் பணியில் எந்தவிதமான தொய்வும் இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com