மேற்கூரைகள் சேதம்

நீடாமங்கலம் அருகே கஜா புயல் ஆக்ரோஷத்தால் மரங்கள் முறிந்து விழுந்தன. கோயில்கள், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மேற்கூரைகள் சேதமடைந்தன.

நீடாமங்கலம் அருகே கஜா புயல் ஆக்ரோஷத்தால் மரங்கள் முறிந்து விழுந்தன. கோயில்கள், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மேற்கூரைகள் சேதமடைந்தன.
 கஜா புயல் காரணமாக நீடாமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு முதல் சூறாவளிக் காற்று வீசியதால் ஆங்காங்கே வீட்டின் கூரைகள் மீதும் சாலைகளிலும், மின்கம்பங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மின்சார வயர்கள் அறுந்து கிடந்தன. மின்சாரம் தடை செய்யப்பட்டதால் மின் விபத்து தவிர்க்கப்பட்டது.
நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் கோயில்வெண்ணி, நகர், சித்தமல்லி, நடுப்படுகை  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மரங்கள் விழுந்து, மின்வயர்கள் அறுந்தன. வீட்டின் மேற்கூரைகள் பல சேதமடைந்தன. மின்தடையால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினரும் வருவாய்த்துறையினரும் ஈடுபட்டனர்.  அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வருவாய்த் துறையினர் சேத விபரங்களை கணக்கிட்டு வருகின்றனர். 
நரிக்குறவர்களுக்கு உணவு: நீடாமங்கலம் காஞ்ஜான் திடல் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 30 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால், இங்குள்ளவர்களை வருவாய்த் துறையினர் மீட்டு, நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைத்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும்  உணவளித்தனர்.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் பெய்த மழையின் அளவு 66.2 மில்லி மீட்டராகும். பாண்டவையாற்றில் 44.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com