பேரிடர் இன்னல் குறைப்பு தின ஒத்திகை, பேரணி

திருவாரூர் மாவட்டத்தில், சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்டத்தில், சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஒத்திகை, பேரணி போன்றவை சனிக்கிழமை நடைபெற்றன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வருவாய் துறை ஆகியவை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, பேரிடர் ஏற்படும் போது பொதுமக்களின் உயிர்களையும், உடமைகளையும் எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.
இதற்காக தீயணைப்பு வாகனம் பயன்படுத்தப்பட்டது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சையளித்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளித்தல், பேரிடர் காலங்களில் நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்தால், அவற்றை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தல், எரிபொருள்களால் ஏற்படும் விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்றவை குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.
முன்னதாக, திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய்க் கோட்டாட்சியர் முருகதாஸ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்  முருகேசன், திருவாரூர் வட்டாட்சியர் குணசீலி, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மன்னார்குடியில்...
வருவாய்த்துறையின் சார்பில், பேரிடர் இன்னல் விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜகோபாலசுவாமி கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை, மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் பத்மாவதி தொடங்கி வைத்தார்.
பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது.
மின் விபத்து மற்றும் மழை வெள்ள ஆபத்து உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும்  வர்த்தகர்களிடம் விநியோகம் செய்யப்பட்டன.
இதில், மன்னார்குடி வட்டாட்சியர் எஸ். ஸ்ரீதேவி சிவானந்தம், நகராட்சி பொறியாளர் ஜி. இளங்கோவன், ஜேசிஐ மன்னை அமைப்பின் தலைவர் அஞ்சறைப்பெட்டி ராஜேஷ், வர்த்தகர் சங்கத் தலைவர் பாரதி ஜீவா மற்றும்  அரசுத் துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் வட்டாட்சியர்  அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு, வட்டாட்சியர் எஸ். செல்வி  தலைமை வகித்தார். இதில், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் அதங்குடி ராஜசேகரன், லெட்சுமாங்குடி சேதுராஜன், சேனைக்கரை ராமையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டியில் வருவாய்த் துறையின் பேரிடர் மேலாண்மை மற்றும் துயர்குறைக்கும் துறை சார்பில், சர்வதேச பேரழிவு குறைப்பு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி,  வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் தலைமையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணி ரயில்வே கேட்,  பழைய பேருந்து நிலையம், திருவாரூர் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
பேரணியின் நிறைவில், இயற்கை பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் விளக்கிப் பேசினார்.
பேரணியில், தனி வட்டாட்சியர்கள் வ. மதியழகன்,  மலர்க்கொடி, வட்டாட்சியர் தங்கமணி, துணை வட்டாட்சியர்கள் இளங்கோவன், ரம்ஜான்பேகம், நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளர் பிரசாத் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com