விவசாயத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாகரூ. 5 ஆயிரம் வழங்கக் கோரி 23-இல் போராட்டம்

வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக தமிழக

வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி, அக். 23-ஆம் தேதி கருப்புக் கொடி போராட்டம்  நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தும், காவிரி டெல்டாவில் முழுமையாக விவசாயம் நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸாக ரூ. 5000 வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக். 23-ஆம் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்த்து வரும் நிலையில், தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகம் போர்க் களமாக மாறும்.
 பத்திரிகைத் துறையை அச்சுறுத்தும் வகையில் ஆளுநர் மாளிகையின் அறிக்கைகள் உள்ளன. நிர்மலா தேவி விவகாரத்தில், அவரது வாக்குமூலத்தை வெளியிட வேண்டும். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதுபோல், நிர்மலா தேவி வாக்குமூலம் வெளியிடப்பட்டால், மிக முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள். எனவே, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து விமர்சிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அத்துறையின் அமைச்சரும், தமிழக முதல்வருமான பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கக் கூடியது. இதன் மூலம் முதல்வர் பொறுப்பில் நீடிப்பதற்கு பழனிசாமிக்கு தார்மிக தகுதியில்லை என்பதால் அவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றார் முத்தரசன்.
 இந்த பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ-க்கள் கோ.பழனிச்சாமி, கே.உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அ.பாஸ்கர், நகரச் செயலாளர் எம்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வி.சந்திரராமன், வி.முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com