ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 23-இல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் அக்.23- ஆம் தேதி கருப்புக் கொடியேந்தி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் அக்.23- ஆம் தேதி கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவாரூரில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வீராச்சாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
தீர்மானங்கள்: காவிரி பாசன மாவட்டங்களை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்; நாகை, கடலூர் மாவட்டங்களில்  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்துவதுடன், இத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 500 வழங்க வேண்டும்; இயற்கை சீற்றங்களாலும், சாகுபடி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் தொடர்ந்து வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கருணைத் தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அக்.23-ஆம் தேதி கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பாஸ்கர், மாவட்டப் பொருளாளர் ஜெ.ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இரெ.ஞானமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com