திருவாரூர்: திருப்பூர், வேலூருக்கு புதிய பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டத்திலிருந்து திருப்பூர், வேலூருக்கு இயக்கப்படும் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தை

திருவாரூர் மாவட்டத்திலிருந்து திருப்பூர், வேலூருக்கு இயக்கப்படும் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கும் வகையில் ரூ.1 கோடி மதிப்பிலான 4 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 
இப்பேருந்துகளில், திருவாரூரிலிருந்து திருப்பூருக்கு ஒரு பேருந்தும், திருத்துறைப்பூண்டியிலிருந்து திருப்பூருக்கு 2 பேருந்துகளும், மன்னார்குடியிலிருந்து வேலூருக்கும் ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளை இயக்கி வைக்கும் விழா திருவாரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. கோபால் முன்னிலை வகித்தார். தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், பேருந்துகளின் சேவையை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியது:
 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புதிய பேருந்து இயக்கம் மற்றும் புதிய வழித்தடங்களை தொடங்கி வைத்தார். அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு, சென்னை தலைமைச் செயலகத்தில் 471 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அண்மையில் தொடங்கி வைத்தது.  அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் கீழ் உள்ள நாகப்பட்டினம் மண்டலத்துக்கு 11 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. 
 அதன்படி, திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூருக்கும், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூருக்கும், மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து வேலூருக்கும் புதிய பேருந்துகளின் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்தில் இட வசதியுடன் கூடிய 52 பயணியர் இருக்கை, அவசர வழி பாதை, தீயணைப்பு சாதனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசை பொறுத்தவரை தமிழக மக்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும், அது தொடர்பாக திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்படும் என்றார்.  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்)  ராஜா, துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சிதம்பரகுமார், கோட்ட மேலாளர் பாலமுருகன், வட்டாட்சியர் குணசீலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com