ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல்  நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரப்பதத்தைக் கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 

ஈரப்பதத்தைக் கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 
திருவாரூர் மாவட்டத்தில், குறுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அதனால், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை அப்பகுதி சாலையிலேயே கொட்டி காயவைத்து வருகின்றனர். இந்நிலை, திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நிலவுகிறது. 
தனியார் வியாபாரிகளிடம் நெல்கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு வேண்டிய விவசாயிகளிடம் ஈரப்பதம் எவ்வளவு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கொள்முதல் செய்யும் பணியும் நடைபெறுகிறது. இதுமட்டுமன்றி, தனியார் நெல் வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு கொள்முதல் நிலைய ஊழியர்கள் தனியார் வியாபாரிகள் போல் செயல்படுகின்றனர்: பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தனியார் வியாபாரிகள் போல் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய சாக்குகளில் கிராமங்களில் சொந்தமாக தனியாக ஆட்களை நியமித்து கொள்முதல் செய்து அதை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்தது போல் கணக்கில் (விவசாயிகளுக்கு ஆன்லைன் வங்கிக்கணக்கு பணம் பட்டுவாடா என்பதால்) காட்டி  தனக்கு வேண்டப்பட்டவரின் பெயருக்குரிய வங்கிக்கணக்கில் வரவு வைக்கின்றனர் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 
மழையால் விவசாயிகள் அவதி: இச்சூழ்நிலையில், நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த நெல் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலேயே சாலைகளில் கொட்டி விவசாயிகள் காய வைத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை பகலில் நீடாமங்கலத்தில் திடீரென மழை பெய்தது. அப்போது, மழை நீரிலிருந்து நெல்லை பாதுகாக்க விவசாயிகள் பெரும் சிரமப்பட்டனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, மழைப் பொழிவு நின்று வெயில் அடித்தது. அடுத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் லேசான மழை பெய்தது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை ஈரப்பதத்தை காரணம் கூறி நெல் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, நெல்லை காயவைக்கலாம் என்று அப்பணியில் ஈடுபட்டால் மழையால் ஈரப்பதம் நெல்லில் கூடுவிடுகிறது.
எனவே, அரசு 17 சதவீதம் ஈரப்பதம் என்ற நிலையை தளர்த்தி ஈரப்பதம் எவ்வளவு இருந்தாலும் நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com