திருவாரூர் மாவட்டத்தில் பாரதியார் நினைவு நாள் கடைப்பிடிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பாரதியார் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பாரதியார் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மன்னார்குடியில்...
மகாகவி பாரதியாரின் 97-ஆவது நினைவு நாளையொட்டி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மேலநாகையில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தேடப்பட்டு வந்த மகாகவி பாரதியார், மேலநாகையில் உள்ள கொடியாளம் கே.வி. ரெங்கசாமி அய்யங்காருக்குச் சொந்தமான பங்களாவில் சிறிதுகாலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். தற்போது அந்த இடம், பாரதியார் நினைவு அறக்கட்டளையின் சார்பில், பாரதியார் நினைவு மணிமண்டபமாக மாற்றப்பட்டு அவரது உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
பாரதியாரின் நினைவுநாளையொட்டி, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அறக்கட்டளை நிர்வாகி பாரதி இரா. பூமிநாதன் தலைமையில், உறுப்பினர்கள் ஜி. மோகன், ஆர். ராமலிங்கம், சோ. ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் ஆர். தாமோதரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஆர். பகவன்ராஜ், நகர தலைவர் தா. சரஸ்வதி, செயலாளர் ரா. யோசுதாஸ் உள்ளிட்டோரும், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மன்னார்குடி வர்த்தக, ரோட்டரி, லயன்ஸ், ஜேசிஐ சங்கங்கள், நேசக்கரம் அமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பாரதியார் மேலநாகைக்கு வந்து நிகழாண்டுடன் நூறாண்டு நிறைவுபெறுவதால், இதை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், நினைவு மணிமண்டபத்தை விரிவுபடுத்தி நூலகம் அமைப்பதுடன், மேலநாகையைச் சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என கோரி, பாரதியார் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடை ஓ.எம்.எ. பள்ளியில் பாரதியார் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முத்துச்செல்வி, பாரதியார் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாரதியார் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, மாணவர்கள் பாரதியாரின் புரட்சிப் பாடல்களைப் பாடி அவரது புகழை நினைவுகூர்ந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சாமிநாதன், துணை முதலவர் புஷ்பா, ஒருங்கிணைப்பாளர் தமிழ் இலக்கியா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் அருகேயுள்ள அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மகாகவி பாரதியாரின் 97-ஆவது  நினைவுதின நிகழ்ச்சி பட்டதாரி ஆசிரியர் தா. கவிதா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாரதியாரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். அடுத்து, ஆசிரியர் முரளி, பாரதி பிடித்த தேர்வடம் என்ற தலைப்பில் பாரதியாரின் நினைவுகளை எடுத்துரைத்தார். மாணவர்கள் பாரதியாரின் பாடல்களையும், ஆத்திச்சூடியையும் பாடினர். மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள் நூல்கள் வழங்கப்பட்டன. 
இதேபோல், கூத்தாநல்லூர் லிட்டில் பிளவர் பள்ளி, வி.எஸ்.டி.எஸ்ஸார் மெட்ரிக்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மன்ப - உல் - உலா மேல்நிலைப்பள்ளி, அரசு  பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், வாழாச்சேரி  மதர்  இந்தியா  மேல்நிலைப்பள்ளி, பொதக்குடி  ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com