காவிரி, வெண்ணாறு பாசனப் பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

காவிரி, வெண்ணாறு பாசனப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.

காவிரி, வெண்ணாறு பாசனப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஹரித்ராநதி தெப்பக்குளத்துக்கு பாமணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட மின் பம்பு பழுதானதால், புதிய மின்பம்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மின்பம்பு இயக்கத்தை அமைச்சர் ஆர். காமராஜ், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
டெல்டா பாசனப் பகுதிகளுக்கு, குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுப்பது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் வகையில் நகர, பேரூர் மற்றும் கிராமப் பகுதிகளிலுள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிது.
அந்த வகையில்தான், மன்னார்குடியில் உள்ள பெரிய குளங்களில்  ஒன்றான ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் வகையில், மின்பம்புகள் மூலம் தற்போது பாமணி ஆற்று நீரை நிரப்பும் வகையில் இயக்கி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஆற்றில் தண்ணீர் வரும்போது மழை பெய்யும். அப்போது, ஆற்று நீருடன் மழைநீரும் கலப்பதால் கடைமடை பகுதிகளுக்கு விரைவில் சென்றடையும். தற்போது போதிய மழை இல்லாததால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு, காவிரி, வெண்ணாறு பாசனப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, ஓரிரு நாள்களில் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் காமராஜ்.
அப்போது, மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் பத்மாவதி, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பொன். வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி. குமார், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் இளங்கோவன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com