கடைமடைக்கு தண்ணீர் செல்லாவிட்டால் அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்

கடைமடை பகுதிகளில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற தண்ணீர் சென்றடையாவிட்டால், தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாய சங்கங்களின்


கடைமடை பகுதிகளில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற தண்ணீர் சென்றடையாவிட்டால், தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
காவிரி டெல்டா தொடர்ந்து 7-ஆவது ஆண்டாக வறண்டு கிடக்கிறது. 6 ஆண்டுகள் கர்நாடகம் சதி செய்தது. நிகழாண்டு தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் திட்டமிட்டு சதி செய்கின்றன. கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால், 100 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் கடலில் கலந்தது. அதேவேளையில், 30,000 கனஅடி தண்ணீர் காவிரி மூலம் பாசனப் பகுதிகளுக்கு விடுவிக்கப்பட்ட போதிலும், விளைநிலங்களைச் சென்றடையவில்லை. பொதுப்பணித்துறை, வேளாண் துறை, விவசாயிகளின் கூட்டுக் கூட்டம் ஆகியன சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் தலைமையில் ஆண்டுதோறும் சாகுபடி தொடங்கும் முன், டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. அக்கூட்டம் கடந்த ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. அதை உடனடியாக நடத்த வேண்டும்.
கடைமடைப் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரடியாக பார்வையிட்டு, தீர்வுகாண முன்வர வேண்டும். மேலும், பாதிப்பு குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்து, உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
ஓரிரு நாட்களில் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாவிட்டால், விவசாயிகளைத் திரட்டி தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com