திருவாரூர் மாவட்டத்துக்கு  வருகை தந்த மு.க. அழகிரி: அறிவிப்பு வெளியிடாததால் ஆதரவாளர்கள் ஏமாற்றம்

திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி புதிய அறிவிப்பு வெளியிடுவார்

திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி புதிய அறிவிப்பு வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
திமுக தலைவர் மு. கருணாநிதி உயிரிழந்த 6-ஆவது நாள் அதாவது கடந்த ஆக.13-ஆம் தேதி அவரது நினைவிடத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற மு.க. அழகிரி அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் உள்ள திமுகவின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் உள்ளனர் என்றும்,  கருணாநிதி நினைவிடத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன் என்றும் அந்த ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் தெரிந்துகொள்வீர்கள் என்றும் கூறிவிட்டுச் சென்றார். இது திமுகவினரிடையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, செப்.5- ஆம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடத்தை நோக்கிப் பேரணி நடைபெறும் என அறிவித்தார்.  இதற்கிடையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிலையில், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என மு.க. அழகிரி அறிவித்தும், இதை ஸ்டாலின் கண்டுகொள்ளாத நிலையில், சென்னையில் செப்.5- ஆம் தேதி அறிவித்தப்படி பேரணியை அழகிரி நடத்தினார். பேரணி முடிவில் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  அழகிரி, கருணாநிதியின் 30-ஆவது நாள் அஞ்சலி பேரணி என மட்டும் கூறிவிட்டு, அரசியல் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இதன்பிறகு, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரும் தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு  ஞாயிற்றுக்கிழமை தனது மகன் துரைதயாநிதியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையில், திருவாரூரிலிருந்து அரசியலை தொடங்கவுள்ளதாக அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் கூறிவந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த அழகிரி புதிய கட்சி குறித்தோ, சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எந்த அறிவிப்பும்  வெளியிடவில்லை. 
அவருடன் வந்த மதுரை, புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் திமுக கொடி மற்றும் கட்சிக்கறை வேட்டி அணிந்து வந்திருந்தனர்.  அரசியலில் அவரது முடிவை தெளிவாக அறிவிக்கும் வரை திமுகவினர் குழப்பத்திலேயே இருக்கும் நிலைதான் உள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com