மத்திய அரசு மௌனம்: குழப்பத்தில் விவசாயிகள்!

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் இருந்து

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் இருந்து எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாததால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற குழப்பத்தில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.
தேசியமாக்கப்பட்ட வங்கிகள் அளித்துள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகளை இணைப்பது, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
சமூக ஊடகங்களில் இவர்களின் போராட்டத்துக்கு உலக அளவில் ஆதரவு பெருகி வருவதால் அனைவரது கவனத்தையும் தமிழக விவசாயிகள் ஈர்த்துள்ளனர்.
எம்.பி.க்கள் வருகை: இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான புதன்கிழமை தங்கள் கோரிக்கைகளை நெஞ்சில் எழுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மக்களவை அதிமுக குழுத் தலைவர் டாக்டர் வேணுகோபால், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். அதற்கு முன்பாக, தில்லியில் கடும் வெப்பத்தில் போராடி வரும் விவசாயிகள் அதைக் கைவிட்டு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
விவசாயிகள் கேள்வி: இதைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், "உத்தர பிரதேச மாநிலத்தில் அம்மாநில விவசாயிகளின் வங்கிக் கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால், அத்தகைய அறிவிப்பை தமிழக அரசால் ஏன் வெளியிட முடியவில்லை?' என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள்  தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஜந்தர் மந்தருக்கு வந்து போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மக்களவையில் குரல்: முன்னதாக, மக்களவையில் தமிழக விவசாயிகளின் போராட்டம் குறித்து அவை அலுவலை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வலியுறுத்தி அளித்துள்ள நோட்டீஸை ஏற்க வேண்டும் என்று மக்களவை அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். ஆனால், "கேள்வி நேரத்தில் இப்பிரச்னையை எழுப்ப அனுமதிக்க முடியாது' என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாகக் கூறினார்.
இந்நிலையில், தில்லியில் 30-ஆவது நாளாக தங்கள் போராட்டத்தை தமிழக விவசாயிகள் புதன்கிழமை மேற்கொண்டனர். அரசியல் கட்சிகள், பொதுமக்களை ஈர்க்க பல  உத்திகளை விவசாயிகள் கையாண்டு போராட்டத்தை இதுநாள்வரை முன்னெடுத்துச் சென்றனர். இருப்பினும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவித உறுதியும் அளிக்கவில்லை. இதனால், அடுத்த கட்டமாக போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது? போராட்டத்தைப் பலவீனப்படுத்த  காவல் துறை நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது? என்பது புரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அலைக்கழித்து அவமதிக்கலாமா? பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
நீடித்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தொடர்ந்து முயற்சித்து வரும்  தன்னை அலைக்கழித்து அவமானப்படுத்தலாமா? என்று அய்யாக்கண்ணு குழுவினரிடம்  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் கேள்வி எழுப்பினார்.
 போராட்டக் குழுவினர் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வ மனுவாக அளித்தால் அதை மத்திய நிதியமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு கிடைக்க உதவுவதாக தன்னை செவ்வாய்க்கிழமை சந்தித்த அய்யாக்கண்ணு குழுவினரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதன்கிழமை மாலை வரையிலும் விவசாயிகள் தரப்பிலிருந்து யாரும் பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்கவில்லை. இதையடுத்து, ஜந்தர் மந்தருக்கு நேரில் வந்து விவசாயிகளிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
 விவசாயிகள் கடன்களை உ.பி. அரசு அதன் அதிகாரத்துக்கு உள்பட்டு தள்ளுபடி செய்தது  போல தமிழக அரசுக்கும் செய்ய உரிமை உண்டு. ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு மட்டும் சலுகை காட்ட இயலாது. அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யும் வரையிலும், கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பது போன்ற சலுகை காட்ட மத்திய அமைச்சர்களிடம் பேசி வருகிறேன். ஆனால், போராட்டத்தை கைவிட விவசாயிகள் மறுப்பது நியாயமா? ஐந்து முறை போராட்டப் பகுதிக்கு நேரில் வந்து வேண்டுகோள் விடுத்தேன். அதன் பிறகும் அலட்சியமாக என்னை அவமானப்படுத்தும் வகையில் விவசாயிகள் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com