இந்தியாவில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: தில்லி நீதிமன்றம்

சிரியா, இராக்கில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்த்தல், நிதி திரட்டுதலில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேருக்கு

சிரியா, இராக்கில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்த்தல், நிதி திரட்டுதலில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அஸார்-உல்-இஸ்லாம் (24), மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முகமது பர்ஹான் ஷேக் (25), அட்னான் ஹசன் (36) ஆகிய 3 பேரும்,
வெளிநாடடில் இருந்து கொண்டு ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்த்தல், நிதி திரட்டுதலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மூவருக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இதனிடையே, அபுதாபியில் இருந்து அதற்கடுத்த நாள் இந்தியாவுக்கு திரும்பி வந்த அவர்கள் மூவரையும் என்ஐஏ கைது செய்தது.
இதுதொடர்பான வழக்கு, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், 3 பேருக்கு எதிராகவும் கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இஸ்லாம், ஷேக் ஆகிய 2 பேர் சார்பாகவும் தனியே மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர்கள், தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு வழங்கும்படி நீதிமன்றத்திடம் கேட்டிருந்தனர். மேலும், பொது வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பி, சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான பணியை தாங்கள் செய்ய விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை வெள்ளிக்கிழமை அளித்தது. அப்போது இஸ்லாம், ஷேக் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அதேநேரத்தில், அட்னான் ஹசனுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தனியே நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com