கேஜரிவாலுக்கு எதிராக காவல் துறையிடம் பாஜக புகார்

பாஜகவுக்கு எதிராக தவறான முறையில் பேசியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அக்கட்சி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக தவறான முறையில் பேசியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அக்கட்சி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக முதல்வர் கேஜரிவால் முகநூலில் வெள்ளிக்கிழமை நேரலையாக பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், 'நீங்கள் (மக்கள்) பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம் உங்களது குழந்தைகளின் வாழ்க்கையை அபாயத்துக்கு உள்ளாக்குகிறீர்கள். மாநகராட்சியில் உரிய நிர்வாகத்தை மேற்கொள்ளாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்கள் குழந்தைகள் டெங்கு, சிக்குன்குனியா நோய்களுக்கு ஆளாவார்கள். அதற்கு நீங்களே பொறுப்பு.
உங்கள் குழந்தைகளுக்கு தில்லி அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க என்னால் முடியும். ஆனால், அவர்களுக்கு அந்த நோய் ஏற்பட யார் காரணம்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியின் தவறான நிர்வாகமே அதற்கு காரணம்' என்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேஜரிவாலின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, மாநில தலைவர் மனோஜ் திவாரியின் வழிகாட்டுதலின் பேரில் நார்த் அவென்யு காவல் நிலையத்தில் கேஜரிவாலுக்கு எதிராக புகார் அளித்தது.
அந்தப் புகார் மனுவில், 'ஆட்சேபிக்கத்தக்க வகையிலான கருத்துக்களை தனது முகநூல் கணக்கில் பதிவு செய்ததன் மூலம் கேஜரிவால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார். பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்த பிறகும், சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரம் செய்துள்ளார். அவரது முகநூல் கணக்கு முடக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com