தில்லியின் பாரம்பரிய கட்டடங்கள்: பாதுகாக்க மறந்த கட்சிகள்!

தில்லியில் எங்குதிரும்பினாலும் கண்களில் தென்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியக் கட்டுமானங்களைப் பாதுகாப்பது தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும்,

தில்லியில் எங்குதிரும்பினாலும் கண்களில் தென்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியக் கட்டுமானங்களைப் பாதுகாப்பது தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரசாரங்களிலும் தென்படாதது பாரம்பரிய கட்டுமான பாதுகாப்பு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்காலம் முதல் இக்காலம் வரையிலான குறிப்பிடத்தக்க நினைவுச் சின்னங்கள், ஆயிரத்துக்கும் அதிகமான பழங்கால பங்களாக்கள், 150 ஆண்டுகள் பழைமையான டவுண் ஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு இடங்கள் தில்லி மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சித் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிதீவிர பிரசாரம் மேற்கொண்ட அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளில் மேற்கூறிய பாரம்பரியமிக்க இடங்களை பாதுகாப்பது குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான விஜய் கோயல் கூறியதாவது:
என்னைப் பொருத்த வரையில், எந்தவொரு கட்சியும், எந்தவொரு அரசும் பாரம்பரியக் கட்டடங்கள் குறித்து கவலைப்பட்டதில்லை. அவற்றின் மீதான கவனம் தற்போது பின்னோக்கிச் சென்றுள்ளது.
அரசியலா, பாரம்பரியக் கட்டடங்களா, இவற்றில் எது முக்கியம் என என்னைக் கேட்டால், நான் பாரம்பரியக் கட்டடங்களைத் தான் கூறுவேன். ஆனால், அத்தகைய கட்டுமானங்களை பராமரிக்கும் விவகாரம் அதிகளவு ஓட்டுகளை பெற்றுத்தருவதில்லை என்பதால், அரசியல்வாதிகள் அதுகுறித்து தங்களின் தேர்தல் அறிக்கைகளிலோ, பிரசாரத்திலோ குறிப்பிடுவதில்லை.
உணவு, உடை, குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டே வாக்குகள் சேகரிக்கப்படுகின்றன. இது வருந்தத்தக்கது என்றார் விஜய் கோயல்.
சாந்தினி செளக், கஷ்மிரி கேட் பகுதிகளில் அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கட்டுமானங்கள், அழகிய வடிவமைப்பைக் கொண்ட கதவுகளுடன் கூடிய பழைமை வாய்ந்த பங்களாக்கள் உரிய பராமரிப்பு தேவைப்படும் நிலையில் இன்றளவிலும் உள்ளன.
பழைய தில்லியில் கடந்த 1866-ஆம் ஆண்டு கட்டப்பட்ட டவுண் ஹாலை மறுசீரமைப்பு செய்யும் திட்டம், அதிகாரிகள் தரப்பிலான தாமதம் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் நிலைக் குழுவின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறினார்.
தில்லி மாநகராட்சிகள் ஒன்றாக இருந்தபோது, பாரம்பரிய கட்டுமானங்களின் பராமரிப்பை கவனிக்க உருவாக்கப்பட்ட குழு, மாநகராட்சிகள் பிரிக்கப்பட்ட பிறகும் அதே பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2011-12 காலகட்டத்தில் மாநகராட்சிகள் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, அவற்றின் நிர்வாகத்தின் கீழாக சுமார் 1,500 பாரம்பரியக் கட்டுமானங்களும், ஏறத்தாழ 900 பழைமையான பங்களாக்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு அவற்றை மீண்டும் கணக்கெடுக்கும் பணியை பாரம்பரிய கட்டுமான பராமரிப்புக் குழு மேற்கொண்டது.
முந்தைய மாநகராட்சித் தேர்தலின்போது, தரம்புரா பகுதியில் உள்ள பழைமையான பங்களாக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட விவகாரத்தில் விஜய் கோயல், ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த விவகாரம் ஊடகங்களில் பிரபலமானது.
இதுகுறித்துப் பேசிய விஜய் கோயல், 'பாரம்பரிய கட்டுமானங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை பிரபலப்படுத்துவதை விடுத்து, ஆம் ஆத்மி அதை அரசியல் ஆக்கியது. அதன் காரணமாகவே அவற்றைப் பராமரிக்கும் விவகாரத்தில் அரசியல்வாதிகள் உள்பட எவரும் ஈடுபட முன்வருவதில்லை' என்றார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய கலை, கலாசார பாரம்பரியத்துக்கான தேசிய அறக்கட்டளையின் தில்லி பிரிவு முன்னாள் அமைப்பாளர் ஏ.ஜி.கே.மேனன் கூறியதாவது:
பாரம்பரிய கட்டுமான பராமரிப்பு விவகாரங்கள் உரிய வாக்குகளை பெற்றுத்தருவதில்லை என்பதால், அரசியல்வாதிகள் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால் சமூக நலனுக்கு எந்த பலனும் இல்லை, பிறகு ஏன் இதை தேர்தலில் தொடர்புப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே மேலோங்கியுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய கட்டுமானங்கள் இணைப்பில் தில்லியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. பெரிய, புதிய கட்டுமானங்களை உருவாக்குவதை வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கும் அரசியல்வாதிகள், பழைய, பாரம்பரிய கட்டுமானங்களை வளர்ச்சிக்கான தடையாகப் பார்க்கின்றனர்.
சிரக் தில்லி, பதர்பூர், பழைய கேட்வே பகுதிகளில் உள்ள பாரம்பரியமிக்க பகுதிகள் சிதைந்து வருகின்றன. ஆனால், அவற்றை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அப்பகுதி கவுன்சிலர்கள் மேற்கொள்ளவில்லை என்று மேனன் கூறினார்.
இதனிடையே, பாரம்பரிய கட்டுமான பாதுகாப்பு ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'பழைய பாரம்பரியங்களை விடுங்கள். சாந்தினி செளக்கில் உள்ளதும், 100 ஆண்டுகளைக் கடந்ததுமான ஹார்டிங்கே நூலகம் போன்ற பழைய நூலகங்களை தங்களது கவுன்சிலர் நிதி கொண்டு பாரமரிப்பதற்குக் கூட எவரும் வாக்குறுதியளிப்பதாக இல்லை' என்றார்.
மற்றொரு ஆர்வலரான கனிகா கூறுகையில், 'குறிப்பிடத்தக்க கலையம்சங்களுடன் கூடிய பழைய கட்டுமானங்கள், மேன்ஷன்கள், கடைகள் பல சிதைந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்கும் கொள்கை ஒன்றை மாநகராட்சிகள் உருவாக்கலாம். அவற்றை பராமரித்து பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தலாம். இதையெல்லாம் செய்வதற்கு எவரும் தயாராக இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com