தில்லி அரசுக்கு எதிராக தினந்தோறும் பிரச்னை எழுப்புகிறார் பய்ஜால்

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தினமும் ஏதேனும் பிரச்னைகளை எழுப்பி வருவதாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மீது மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தினமும் ஏதேனும் பிரச்னைகளை எழுப்பி வருவதாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மீது மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அனில் பய்ஜால், துணை நிலை ஆளுநராக கடந்த டிசம்பர் மாதம் பதவியேற்ற நிலையில் தற்போது முதல்முறையாக முதல்வர் கேஜரிவால் அவரை நேரடியாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கேஜரிவால் பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுடன் நிர்வாக ரீதியாக நல்ல உறவையே மேற்கொண்டு வந்தோம். முதல் 3 மாதங்களுக்கு அவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவராக இருந்தார்.
அவருக்கு எதிராக நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், தற்போது தினமும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக ஏதேனும் ஒரு பிரச்னையை எழுப்பி வருகிறார்.
குறிப்பாக, மாநகராட்சித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இதில் எங்கள் தவறு என்ன இருக்கிறது? தில்லியின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநருக்கு ஒத்துழைப்பு வழங்கி பணியாற்ற முயற்சிக்கிறோம். ஆனால், துணைநிலை ஆளுநர் தினமும் பிரச்னை தருகிறார்.
ஆம் ஆத்மி அரசின் முடிவுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு சுங்லு குழு அமைத்து மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். பாஜக, ஜனநாயகமற்ற ஒரு கட்சியாகும்.
எதிர்க்கட்சி ஆளும் அரசுகளை கவிழ்ப்பது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை உடைப்பது, துணைநிலை ஆளுநரை அவற்றுக்கு எதிராக பயன்படுத்துவது இதுவே அதன் நோக்கமாகும் என்று கேஜரிவால் குற்றம்சாட்டினார்.
ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களுக்காக செலவு செய்த ரூ.97 கோடியை அக்கட்சியிடம் இருந்து வசூல் செய்ய உத்தரவிட்டது, அக்கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டது ஆகிய நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் மேற்கொண்டுள்ள நிலையில் கேஜரிவால் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com