பாஜகவில் சேர்ந்தார் பர்கா சிங்

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்ட தில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், தில்லி மகளிர்

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்ட தில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், தில்லி மகளிர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான பர்கா சிங், பாஜகவில் சனிக்கிழமை சேர்ந்தார். தில்லி மாநகராட்சிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பார்கா சிங்கின் இந்த கட்சி மாற்றம் தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பெண் வேட்பாளர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் பர்கா சிங் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு வெளியே பர்கா சிங் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மேலும், ராகுல் காந்தியையும், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கனையும் கடுமையாக விமர்சித்த பர்கா சிங், தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பர்கா சிங்கை 6 ஆண்டுகள் நீக்கி காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்நிலையில், பாஜக தேசிய துணைத் தலைவரும், தில்லி பாஜக பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு, மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பர்கா சிங் பாஜகவில் சனிக்கிழமை சேர்ந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பர்கா சிங் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடுவதற்காகவே, பதவிகளைப் பெறவோ நான் பாஜகவில் சேரவில்லை. பாஜக எனக்கு ஒதுக்கும் பணியை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். 'முத்தலாக் விவகாரத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால் இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் பதிலளித்திருந்த விதம் என்னை திருப்திபடுத்தியது.
பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் திட்டங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன என்றார் பர்கா சிங்.
பர்கா சிங் இணைப்பு குறித்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் கோயல் கூறுகையில், 'பர்கா சிங் இணைப்பு பாஜகவுக்கு வலுசேர்த்து உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், தில்லி காங்கிரஸும் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்பதே இல்லை. அக்கட்சியின் மூத்த தலைவர்களை திருப்திபடுத்த முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது' என்று குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com