சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

"பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால், தில்லியில் மழை மற்றும் குளிர் காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், எஸ்.பி.கர்க் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது, பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்  துறை அமைச்சகம், விவசாயத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் விவரம் வருமாறு: இந்த விவகாரத்தில், மேற்கண்ட 3 அமைச்சகங்களின் செயலர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தி,  முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
வேளாண் தொழில்நுட்பங்களில் புதுமையை புகுத்துவதற்கு, சிறப்பு நிதி உருவாக்குவதற்கான வாய்ப்பு குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும், தில்லி அரசும் நிலவர அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் தாங்கள் வெளியிட்ட அறிவிக்கைகள், நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள், அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள், பயிர்க் கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். பயிர்க் கழிவுகளை எரிக்கும் முறைக்கு மாற்றாக, இதர வழிமுறைகளை கையாண்டு, அதன் மூலம் நல்ல பலன் கிடைத்திருந்தால், அதுதொடர்பாகவும் மாநில அரசுகள் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com