தமிழ்ப் புத்தகம் படிப்போர் குறைந்ததற்கு என்ன காரணம்?: ஆய்வு செய்ய இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல்

தமிழ்ப் புத்தகங்கள் படிப்போரின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப் புத்தகங்கள் படிப்போரின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன் கேட்டுக் கொண்டார்.
மணிமேகலை பிரசுரத்தின் 10 நூல்களின் வெளியீட்டு விழா, நூல்கள் விற்பனைக் கண்காட்சி தில்லி தமிழ்ச் சங்கத்தின் பாரதி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல. கணேசன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
புத்தகங்களை வாங்குவதற்கு ஆர்வம் குறைந்துவிட்டது என்பது ஒருபுறம் உண்மை. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்; புத்தகங்களும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன என்பதும் உண்மையே. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்வது தொடர்பாக தில்லி தமிழ்ச் சங்கம் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மத்திய அரசு எட்டாம் அட்டவணையில் சில மொழிகளைச் சேர்த்துள்ளது. அதில் தமிழும் உள்ளது. அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. தமிழ்நாட்டில் தமிழ் எழுத வராது என்ற தலைமுறை உருவாகியது. தற்போது தமிழ் படிக்க வராது என்ற தலைமுறை உருவாகியுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாக நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்தேன். தமிழே படிக்க வராது என்ற தலைமுறை உருவான பின்னர், தமிழ்ப் புத்தகங்கள் எப்படி விற்பனையாகும்? உண்மையிலேயே தமிழ்ப் புத்தகங்களை தமிழர்கள் படிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்த விழாவில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய், மருத்துவர் சுப்பிரமணியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப் பொது மேலாளார் சண்முகசுந்தரம், எழுத்தாளர்கள் ராமமூர்த்தி, உடுமலை மேஜர் பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அதன் புதிய 10 நூல்கள் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டன.
இதில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், இணைச் செயலாளர் பாலமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் எம். சம்பத்குமார், டி. பெரியசாமி, எம். ஆறுமுகம், தில்லவாழ் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நூல்கள் விற்பனைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை நடைபெறு கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com