நீட் விலக்கு விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்தித்து ஜி.கே. வாசன் மனு

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தல், விவசாய பிரச்னைகள் ஆகியன தொடர்பாக குடியரசுத்

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தல், விவசாய பிரச்னைகள் ஆகியன தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விவாதித்தேன். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், மாணவர்களுக்கான நீட் தேர்வு விலக்கு ஆகிய பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினேன்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் எதிர்ப்பு உள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியும், குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கைகள் அமைய வேண்டும். எனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டேன்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநிலத்தின், மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் எண்ணங்களைப் பிரதிபலித்திருக்கிறது. இதன் அடிப்படையில், நியாயமான முறையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேலும் மேலும் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட்டு ஒரு நல்ல முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com