கண்களைக் கட்டிக் கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் போராடி  வரும் தமிழக விவசாயிகள் திங்கள்கிழமை தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் போராடி  வரும் தமிழக விவசாயிகள் திங்கள்கிழமை தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வது,  நதிகளை இணைப்பது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அண்மையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற பிரதமருக்கு மனு அனுப்பும் வகையில், அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தையும் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களை தில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,  திங்கள்கிழமை தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாயிகளின் குறைகளை கேட்க பிரதமர் நரேந்திர மோடி  மறுத்து வருகிறார்.  விவசாயிகள்,  பொதுமக்கள் ஆகியோரின்  குறைகளை பிரதமர்,  அமைச்சர்கள்  கேட்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், விவசாயிகளைப் பார்க்க மோடி மறுக்கிறார்.  பிரதமரைச் சந்திக்க மார்ச் மாதம் மனுக் கொடுத்தோம்.  ஆனால் ஐந்து மாதங்களாகியும் பிரதமரைச் சந்திக்க முடியவில்லை.  இதனால் தொடர்ந்து காத்திருக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் விவசாயிகளின் விளைபொருளுக்கு இரு மடங்கு விலை தருவதாகப் பிரதமர் கூறினார்.  ஆனால்,  ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கண்களை பிரதமர் மோடி  கட்டிவிட்டார். அவர் எங்களைச் சந்திக்கும் வரை ஜந்தர் மந்தரில்தான் இருப்போம்.  முதிய விவசாயிகள் நாராயணசாமி,  பெரியசாமி ஆகியோர் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர். இதனால், கட்டப்பட்டுள்ள எங்கள் கண்களை பிரதமர் மோடி திறந்துவிட வேண்டும். எங்கள் குறைகளைக் கேட்க வேண்டும். தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டும்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்  உள்ளிட்ட  எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் அய்யாக்கண்ணு.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில், சுதந்திர தினவிழா பாதுகாப்புப் காரணங்களையொட்டி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சிலரை ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய தில்லி காவல்துறையினர், அவர்களை நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com