கன்னியாகுமரி மாவட்டத்தில் 80% மின் விநியோகம்: தில்லியில் அமைச்சர் தங்கமணி பேட்டி

"ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, 80 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

"ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, 80 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், 24 மணி நேரமும் மின்சாரம்  விநியோகம்  செய்வது, அனைத்து வீடுகள், கிராமங்களுக்கு மின் விநியோகம் அளிப்பதுஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போதே அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்விநியோகம் அளிக்கப்பட்டிருந்தது. 
சென்னை மாநகரைப் பொருத்தவரையில்  அடிக்கடி தாக்கும் புயலால் மின் கம்பங்கள் பழுதாகின்றன. இதனால், மாநகரில்  மேல்வழி மின்கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றுவதற்கு ரூ.3,200 கோடியை மத்திய அரசிடம் கேட்டிருந்தோம்.  அதைத் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.  பல்வேறு கட்டங்களாக இப்பணிகள் நிறைவேற்றப்படும்.
நவம்பர் 29-ஆம் தேதி "ஒக்கி' புயலின் தாக்கம் காரணமாக  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் பெயர்ந்து விழுந்தன. 11 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. 
முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் நான்கு நாள்கள் துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது மின்வாரியத் தலைவர், உயரதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.  வெளி மாவட்டங்களில் இருந்து 8 ஆயிரம் பணியாளர்கள் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்தில் 80 சதவீதம் அளவுக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
மின்சார சேத மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.  மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரும் போது மின்வாரியத்திற்கான ஒதுக்கீடு குறித்து கோரப்படும்.  மின் பராமரிப்புப் பணியின் போது உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்  நிதி வழங்கப்பட்டுள்ளது.  அதுதவிர, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தும் உதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com