கிழக்கு தில்லி மாநகராட்சியில் சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு!

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, முன்னேற்ற வரி ஆகியவை உயரும் என்று தெரிய வந்துள்ளது. 

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, முன்னேற்ற வரி ஆகியவை உயரும் என்று தெரிய வந்துள்ளது. 
கிழக்கு தில்லி மாநகராட்சியின்  2017-18 நிதியாண்டின் திருத்தப்பட்ட  நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை அதன் ஆணையர் ரன்வீர் சிங்  வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சொத்து வரியை 5 சதவீதம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது கல்வி செஸ் வரியாக வசூலிக்கப்படவுள்ளது. 
மேலும், சொத்து வரியில் 15 சதவீதம் முன்னேற்ற வரியாக வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களிடம் தொழில் வரி வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
சொத்து வரியை அதிகரிப்பதன்  மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி, முன்னேற்ற வரியை அதிகரிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி, தொழில் வரி மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி என  கூடுதலாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கிருஷ்ணா நகர்ப் பகுதியில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் ரூ. 23 கோடியில் நிறுவப்படவுள்ளன. ஆதித்யா ஆர்கேட் ப்ரீத் விஹார், கீதா காலனி, பாபர்பூர், நந்த் லகரி ஆகிய பகுதிகளில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் உருவாக்கப்படவுள்ளன. இவை தவிர  கிழக்கு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 30 இடங்களில் கார் நிறுத்துமிடங்கள் உருவாக்கப்படவுள்ளன. 
சுவாமி தயானந்த்  மருத்துவமனையில் (எஸ்.டி.என்.) அவசர சிகிச்சைக்காக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. எஸ்.டி.என். மருத்துவமனையில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், நடைபாதை அமைக்கப்படவுள்ளது. எஸ்.டி.என். மருத்துவமனையில் ரூ.1 கோடியில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மேலும், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 
15 மாநகராட்சிப் பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விபத்துக் காப்புறுதித் திட்டத்தை  செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் 228 புதிய வகுப்பறைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், துப்பரவுப் பணிகளுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிரானது: ஆம் ஆத்மி
கிழக்கு தில்லி மாநகராட்சியின் உத்தேச பட்ஜெட் மக்களுக்கு எதிராக உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஏற்கெனவே வசூலிக்கப்படும் வரியை திறமையாகக் கையாளாததும், புதிய வரிகளை அறிமுகப்படுத்தியிருப்பதும் கிழக்கு தில்லி மாநகராட்சியை ஆளும் பாஜகவின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மாநகராட்சியில் உள்ள நிதிசார் ஊழல்,  தவறான நிர்வாகம் ஆகியவற்றை சரி செய்ய கிழக்கு தில்லி மாநகராட்சி தவறிவிட்டதையும் இது காட்டுகிறது.  மாநகராட்சிகளுக்கு தலைநகரில் குப்பை மேலாண்மையும் தெரியவில்லை,  நிதி மேலாண்மையும் தெரியவில்லை.  அனைத்து நிலைகளிலும் மாநகராட்சிகள் தோல்வி கண்டுள்ளன.
தில்லி சட்டப்பேரவையில் மணீஷ் சிசோடியா கூடுதல் வரிகள் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.  மக்களுக்கு ஏற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம்,  பாஜகவைவிட ஆம் ஆத்மி கட்சி நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும் என்பது உண்மையாகியுள்ளது. கல்வி என்ற பெயரில் சொத்து வரியை 5 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை சீரழித்துவிட்டு, சொத்துவரியை உயர்த்தியுள்ளனர். மாநகராட்சிகள் தில்லி நிதியமைச்சரிடமிருந்தும், அவர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் திலிப் பாண்டே. ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் வாஜ்பேயி கூறுகையில், "தில்லி மாநகராட்சிகளில் சிறப்பு வரிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் மேம்பாட்டுக்கு இதுவரை அதன்  தலைவர்கள் செய்தது என்ன?  கடந்த காலங்களில் மாநகராட்சிகளின் மேம்பாட்டுக்கு ஒன்றும் செய்யாமல், வரிகளை தற்போது உயர்த்துவது ஏன்? மாநகராட்சிகளை நிர்வகிக்க பாஜகவுக்கு தெரிவில்லையென்றால், ஆம் ஆத்மியிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
கிழக்கு தில்லி மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்  ரஹ்மான் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. கிழக்கு தில்லி மாநகராட்சி உத்தேசித்துள்ள பட்ஜெட் பாமர மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. மக்களுக்கு எதிரானது. வரி உயர்வை திரும்பப் பெறும் வரை மாநகராட்சிக்குள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராடுவோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com