தலைநகரில் காற்றின் தரத்தில் சிறிதளவு மேம்பாடு!

தலைநகரில் காற்றின் தரம் சிறிதளவு மேம்பாடு அடைந்துள்ளது.  எனினும்,  மிகவும் மோசமான பிரிவிலேயே காற்றின் தரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைநகரில் காற்றின் தரம் சிறிதளவு மேம்பாடு அடைந்துள்ளது.  எனினும்,  மிகவும் மோசமான பிரிவிலேயே காற்றின் தரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு பின்பு தலைநகரில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அவ்வப்போது இதன் போக்கில் சில மாற்றங்கள் தென்பட்டபோதிலும் வாகனப் புகை,  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள், சாலையோர, கட்டடப் பகுதிகளில் உருவாகும் தூசிகள், குப்பைகள் எரிப்பு போன்ற காரணிகளால் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. 
எனினும்,  பசுமைத் தீர்ப்பாயம், நீதிமன்றங்கள் அறிவுறுத்தலின் காரணமாக அரசுகள் மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்,  தில்லி, தேசியத் தலைநகரில்  வியாழக்கிழமை காற்றின் தரம் சற்று மேம்பாட்டுடன் காணப்பட்டது. எனினும், காற்றின் தரம் "மிகவும் மோசமான' பிரிவில்தான் உள்ளது. காற்றின் தரக் குறியீடு புள்ளிவிவரத் தகவலின்படி,  தில்லி லோதி ரோடு பகுதியில் நுண்துகள் பிஎம் 2.5 மாசுவானது மிகவும் மோசமான பிரிவில் காணப்பட்டது.
நவம்பர் 7-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரையிலான ஏழு நாள்கள் காலத்தில் தலைநகரில் காற்றின் தரக் குறியீடு மோசமான பிரிவில் இருந்தது. இதுகுறித்து, தில்லி அரசின் அதிகாரி கூறுகையில், "காற்றின் தரக் குறியீடு குறிப்பிட்ட அளவைக் கடந்தால் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ளுமாறு கேட்டு "வாட்ஸ் அப்' மூலம் தில்லி சுற்றுச்சூழல் துறையின் செயலர் எச்சரிக்கை அளிப்பார்' என்றார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட தகவலில், "காற்றின் தரக் குறீயீடு அடிப்படையில் தில்லி அரசின் வாட்ஸ் அப்பின் மூலம் சுற்றுச்சூழல் செயலரால் உஷார்படுத்தப்படும்.  தாமதமின்றி சம்பந்தப்பட்ட துறையினரால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மாசுவைக் கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பு நடவடிக்கைகள், உயிரி பொருள்கள் எரிக்கப்படுவதைத் தடுத்தல்,  மாசுபடுத்தும் வாகனங்கள், டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டைத் தடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு தில்லி பொதுப் பணித்துறை, தில்லி மேம்பாட்டு ஆணையம்,  மாநகராட்சிகளை அறிவுறுத்தும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com