புதிய தமிழகம் மாநாட்டில் நிதீஷ் குமார்,  ஹார்திக் படேல் பங்கேற்பர்: கிருஷ்ணசாமி தகவல்

2018, ஜனவரியில் மதுரையில்  புதிய தமிழகம் கட்சி  நடத்தும் சாதி ஒருங்கிணைப்பு மாநாட்டில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்

2018, ஜனவரியில் மதுரையில்  புதிய தமிழகம் கட்சி  நடத்தும் சாதி ஒருங்கிணைப்பு மாநாட்டில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹார்திக் படேல் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தின் தேவேந்திர குல வேளாளர், பிகாரின் குறுமி இனம், குஜராத்தின் படேல் இனம், உத்தர பிரதேசத்தின் மள்ளார் இனம், ஆந்திர பிரதேசத்தின் காபூர் இனம் ஆகியவை ஒத்த இயல்புடைய ஆதி வேளாண் குடி இனங்களாகும். இவர்கள் மொழியால் வேறுபட்டிருந்தாலும், கலாசாரப் பண்பாட்டு ரீதியில் இவர்கள் ஒரே இனமாகும். ஒத்த கலாசாரக் கூறுகளைக் கொண்ட இந்த இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களை ஒரே குரலாக ஒலிக்க வைக்கும் வகையில் மதுரையில் மாநாட்டை 2018, ஜனவரியில்  புதிய தமிழகம் கட்சி நடத்தவுள்ளது. 
இம்மாநாட்டில் குறுமி இனத்தைச் சேர்ந்த பிகார் மாநில  முதல்வர் நிதீஷ் குமார், குஜராத் படேல் சமூகத்தின் தலைவர் ஹார்திக் படேல்  சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், உத்தர பிரதேசத்தின் மள்ளார் இனம், ஆந்திர பிரதேசத்தின் காபூர் இனத் தலைவர்கள்  இதில் கலந்து கொள்ளவுள்ளனர். 
இந்தியா முழுவதும் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் வேரைத் தேடிக் கண்டறியும் வகையில் இந்த மாநாடு  நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் சாதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் தொடர்பாகவும் மாநாட்டில் விவாதிக்கவுள்ளோம் என்றார் கே. கிருஷ்ணசாமி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com