போலி கல்வி வாரியம் நடத்தி மோசடி: 6 பேர் கைது: நாடு முழுவதும் 20 ஆயிரம் பேருக்கு போலி சான்றிதழ் விநியோகம்

போலி கல்வி வாரியம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேரை தில்லியில் காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி கல்வி வாரியம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேரை தில்லியில் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17,000 போலி கல்விச் சான்றிதழ்,  மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும்,  நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டிருந்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலி கல்வி வாரியம்: இது குறித்து தில்லி கிழக்கு சரக காவல் இணை ஆணையர் ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
"தில்லி மேல்நிலை கல்வி வாரியம்' எனும் பெயரில் செயல்படும் கல்வி அமைப்பால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் போலியாக இருப்பது தெரிய வந்ததாக காவல் துறைக்கு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி ஒரு புகார் வந்தது.  இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது,  அந்தக் கல்வி வாரியம் போலியானது எனத்  கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
தனிப்படை அமைப்பு:  போலி கல்வி வாரியம் நடத்திய கும்பலைப் பிடிக்க ஷாதரா சரக காவல் துணை ஆணையர் நுபுர் பிரசாத் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.  இப்படையினர் நடத்திய விசாரணையில்,  புகார்தாரருக்கு போலிச் சான்றிதழைப் பர்ஷந்த் சோலங்கி என்பவர் வழங்கியிருப்பது தெரிய வந்தது.
கைது: இதையடுத்து, கோகுல்புரி,  வஜிராபாத் சாலைப் பகுதியில் சோலங்கி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  போலி கல்வி வாரியத்தில் அவர் கணினி உபயோகிப்பாளராக பணியாற்றியதாக ஒப்புக் கொண்டார்.  மேலும், பல்ஜீத் என்பவரிடம் இருந்து போலிச் சான்றிதழ்களைப் பெற்று வந்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து,  புராரி பகுதியில் இருந்து பல்ஜீத் சிங் கைது செய்யப்பட்டார். அவர் போலி கல்வி வாரியத்தின் இயக்குநராகச் செயல்பட்டது தெரிய வந்தது.  இந்த மோசடியில் தில்லியைச் சேர்ந்த  மாங்கே ராம் ஆச்சார்யா (எ) மணிஷ் பிரதாப் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளது தெரிய வந்தது.  அவர் ஒரு வழக்கில் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும்,  தில்லி விகாஷ்புரியில் போலி கல்விச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. 
அதிரடி சோதனை:   இதைத் தொடர்ந்து,  விகாஷ்புரி போலி கல்வி வாரியத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  இதன்தொடர்ச்சியாக,  அல்தாஃப் ரஸா,  ராம்தேவ் சர்மா,  லக்ஷய ரத்தோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில் அவர்கள் மூவரும் போலி கல்வி வாரியத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தது கண்டறியப்பட்டது.  
இந்த வாரியத்தின் தலைவராக உத்தர பிரதேச மாநிலம்,  பிரதாப் கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவ் பிரசாத் பாண்டே  (65) இருப்பதும்,  லக்னௌவில் இருந்து அவர் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.  இக் கும்பலிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
நூதன விளம்பரம்:  10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களை அளிப்பதாகவும்,  கல்வி வாரியத்திற்கு ஆள்களைத் தேர்வு செய்வதாகவும்  உள்ளூர் நாளிதழ்களில் போலி கல்வி வாரியத்திற்கு விளம்பரம் செய்து வந்துள்ளனர். இதற்காக போலி மேல்நிலைக் கல்வி வாரியத்தின் பெயரில் இணையதள முகவரியையும் தயாரித்து செயல்படுத்தி வந்துள்ளனர்.  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இதன் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர். 
தனியார் பள்ளிகளிடம் வசூல்: இணைவிப்பு அங்கீகாரம் வழங்குவதற்காக தனியார் பள்ளிகளிடமிருந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். 
பிரசாத் பாண்டேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர் 2012-ஆம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்திருப்பதும், இச்சான்றிதழ்களைப் பயன்படுத்தி பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருந்து இந்திய பாஸ்போர்ட்  பெற்றிருப்பதும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
17 ஆயிரம் சான்றிதழ்:  கைதான கும்பலிடம் இருந்து 17 ஆயிரம் போலி மதிப்பெண்,  பட்டம்,  நுழைவுச்சீட்டு சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  பல்வேறு போலி பள்ளிகளின் பெயர்களைக் கொண்ட 53 ரப்பர் ஸ்டாம்புகள், 2 ஸ்கேனர் கருவிகள்,  2 மானிட்டர்கள், 2 சிபியு கருவிகள்,  6 ஏடிஎம் அட்டைகள், பல்வேறு வங்கிக் கணக்குகளின் பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  
இக்கும்பலுடன் கல்வித் துறையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் இணை ஆணையர் ரவீந்திர யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com