எய்ம்ஸ் செவிலியர் உயிரிழந்த விவகாரம்: மூத்த உறைவிட மருத்துவர் பணிநீக்கம்

தில்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் உயிரிழந்த சம்பவத்தில், மூத்த உறைவிட மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எய்ம்ஸ் செவிலியர் உயிரிழந்த விவகாரம்: மூத்த உறைவிட மருத்துவர் பணிநீக்கம்

தில்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் உயிரிழந்த சம்பவத்தில், மூத்த உறைவிட மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 3 மருத்துவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ராஜ்பீர் கௌர் (28) என்ற செவிலியர், பிரசவத்துக்காக அந்த மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், குழந்தை இறந்துபோனதுடன், ராஜ்பூரும் கோமா நிலைக்கு சென்றார். செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சில தினங்களில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று சக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 5 உறைவிட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறைவிட மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை உறைவிட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இடையே பனிப்போராட்டம் நிலவி வந்தது.
இதனிடையே, ராஜ்பீருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பாக விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கே.சர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை மருத்துவமனை நிர்வாகத்திடம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, எய்ம்ஸ் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சம்பந்தப்பட்ட செவிலியருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றபோது, மயக்க மருந்தியல் துறையைச் சேர்ந்த மூத்த உறைவிட மருத்துவர் ஒருவர் ஒரு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறார்.
எந்த காரணமும் இன்றி, அவர் அலட்சியத்துடன் செயல்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் அளிக்க வேண்டிய சிகிச்சை இன்றியே, ராஜ்பீருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையின்போது, அலட்சியத்துடன் செயல்பட்ட அந்த மூத்த உறைவிட மருத்துவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, மகப்பேறு துறை மூத்த உறைவிட மருத்துவருக்கு எதிராக அதிருப்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் இப்பணியில் தொடர முடியாது.
மேலும், மயக்க மருந்தியல் துறை இளநிலை மருத்துவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர மகப்பேறு சிகிச்சைகளின்போது, மூத்த உறைவிட மருத்துவர்கள் உடனிருப்பதை உறுதி செய்யும்படி, மயக்க மருந்தியல் துறைத் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com