இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு: தில்லி பல்கலை. திட்டம்

இளநிலைப் பட்டப் (யு.ஜி.) படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ள தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு: தில்லி பல்கலை. திட்டம்

இளநிலைப் பட்டப் (யு.ஜி.) படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ள தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், வழக்கமான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் நடைமுறையை அதற்கான காலத்திற்கு இரு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கவும் பல்கலை. நிர்வாகம் உத்தேசித்து வருகிறது.
 தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கும். மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் "கட்-ஆப்' அடிப்படையில் பல்கலை.யின் பல்வேறு பட்டப் படிப்புகளில் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது.
 கடந்த ஆண்டு இணையதளம் மூலம் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பல்கலை.யின் இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்தும், தேவையான கல்வி ஆவணங்களில் சுய சான்றொப்பமிட்டு அவற்றை ஸ்கேன் செய்து இணையளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 மேலும், விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும் இணையதளம் வாயிலாக செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டிருந்தது.  பல்கலை. மூலம் "கட்-ஆப்' தேர்வுப் பட்டியல் வெளியான பிறகு மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படிப்புகள், கல்லூரிகள் விவரங்களை அறிந்து அதற்கான சேர்க்கைப் படிவத்தையும் பெற வசதி அளிக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான இளநிலைப் பட்டப் படிப்பு சேர்க்கையில் புதிய நடைமுறைகளை மேற்கொள்ள தில்லி பல்கலை. உத்தேசித்து வருகிறது. இதுகுறித்து இப்பல்கலை.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 பல்கலைக்கழகம் வழக்கமாக மேற்கொள்ளும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் நடைமுறைகளை மே மாதம் இறுதிக்குப் பதிலாக மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவும், அதேபோன்று விண்ணப்பத்தை அளிப்பதற்கான கடைசி தேதி வழக்கமான
காலத்திலேயே முடிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாணவர்களை வழக்கமான கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்வதற்குப் பதிலாக நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்வை எந்த வகையில் நடத்துவது, தேர்வுத் தாள்களை எத்தகைய அடிப்படையில் அமைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான நிலைக் குழு துணைவேந்தருக்கு ஆலோசனைகள் அளிக்கும். இந்த ஆலோசனைகள் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கொள்கைத் திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பாக பல்கலை.யின் கல்விக் குழு, நிர்வாகக் குழு ஆகியவற்றிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றார் அந்த அதிகாரி.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com