மானிய விலையில் தானியங்கள்: ஆதார் எண் அவசியம்: மத்திய அரசு திட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வினியோக முறையில் மானிய விலையில் தானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண்ணை
மானிய விலையில் தானியங்கள்: ஆதார் எண் அவசியம்: மத்திய அரசு திட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வினியோக முறையில் மானிய விலையில் தானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாதந்தோறும் நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.2-இல் இருந்து ரூ.3-க்குள் வினியோகிக்கப்படுகிறது.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கொண்டுவருவது குறித்து தில்லியில் மாநில உணவுத் துறை அமைச்சர்கள், செயலர்களுடன் மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறியதாவது:
நாடு முழுவதும் 5.27 லட்சம் நியாய விலைக் கடைகள் உள்ளன. அவற்றில் சுமார் 29 ஆயிரம் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் நியாய விலைக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழகம், ஆந்திரம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உறுதி அளித்துள்ளன.
ரூபாய் நோட்டு நடவடிக்கையை விமர்சித்தும், எதிர்த்தும் வந்த மேற்கு வங்கமும், உத்தரகண்ட், பிகார் ஆகிய மாநிலங்களும் வரும் ஜூன் மாதத்துக்குள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை நியாய விலைக் கடைகளில் ஏற்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளன. அதேநேரம், பணம் செலுத்தும் வசதியும் தொடரும்.
தானியங்களை பெறுவதற்கு குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதன்மூலம், வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டு, ஊழல் ஒழிக்கப்படும் என்றார் பாஸ்வான். ஆதார் எண் அத்தியாவசியமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது; அதை கட்டாயமாக்கவில்லை என்றும் மத்திய உணவுத் துறை செயலர் ப்ரீத்தி சுடான் தெரிவித்தார்.
இதுவரை மொத்தம் 72 சதவீத குடும்ப அட்டைகளில் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com