4 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்: இருவர் கைது

தெற்கு தில்லியின் கிடோர்னி பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு தில்லியின் கிடோர்னி பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடோர்னி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டடத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஸ்வார்ன் சிங் (45), அவரது மகன் ஜஸ்பால் (22), திபு (28), அனில் (23), பல்வீந்தர் (32) ஆகிய 5 தொழிலாளர்கள் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொட்டிக்குள் இறங்கிய 5 பேரும், பின்னர் வெளியே வரவில்லை.
இதுகுறித்து, தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி, அங்கு மயங்கிய நிலையில் கிடந்த 5 பேரையும் மீட்டனர்.
அவர்களில் 3 பேர், தனியார் மருத்துவமனைக்கும் இருவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மருத்துவர்களின் பரிசோதனையில் ஸ்வார்ன் சிங்  உள்பட 4 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
ஜஸ்பால் மட்டும் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். கழிவு நீர் தொட்டிக்குள் விஷவாயுவை சுவாசித்ததால் தொழிலாளர்கள் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த கட்டடத்தின் மேஸ்திரி நிரஞ்சன் சிங் உள்பட இருவரை கைது செய்துள்ளனர்.
கட்டட உரிமையாளர் கூறியதன் பேரில், கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக ஸ்வார்ன் சிங் உள்ளிட்ட 5 தொழிலாளர்களை அழைத்து வந்த நிரஞ்சன் சிங், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமலேயே அனைவரையும் பணியில் ஈடுபடுத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதேபோல், கைதான மற்றொருவரான ரிதிபால் என்பவரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவரும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எதுவும் செய்யவில்லை. கைதானஇருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com