தில்லியில் பிற மாநில பேருந்துகளுக்கு தடை கோரிய மனு: நிலவர அறிக்கைதாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு

தலைநகர் தில்லியில் விதிகளுக்கு புறம்பாக  தனியாரால் இயக்கப்பட்டு வரும் பிற மாநில பதிவு பெற்ற பேருந்துகளுக்குத் தடை விதிக்கக் கோரி

தலைநகர் தில்லியில் விதிகளுக்கு புறம்பாக  தனியாரால் இயக்கப்பட்டு வரும் பிற மாநில பதிவு பெற்ற பேருந்துகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கலான பொது நல மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், தில்லி காவல் துறையின் போக்குவரத்துத் துணை ஆணையர் நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக ராஜ்தானி ராஷ்டீரிய ஷேத்ர சாலக் யூனியன் எனும் அமைப்பு வழக்குரைஞர் சஞ்சீவ் குமார் மூலம் தில்லி உயர் நீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில்,  "தில்லியில் உத்தர பிரதேச மாநிலத்தின் பதிவு பெற்ற தனியார் பேருந்துகள் பல்வேறு பாதைகள் வழியாக தில்லிக்கு எடுத்து வரப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.  உரிய அனுமதியின்றி பயணிகளை ஏற்றியும்,  சட்ட விதிகளை மீறியும் இயக்கப்படும் இந்த வாகனங்களால் தில்லி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  இந்த வாகனங்கள் டீசலில் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும், தலைநகரில் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.  இந்த விஷயத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரும்,  போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே, தலைநகரில் தனியார் மூலம் இயக்கப்படும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பேருந்துகளுக்குத் தடை விதிக்க வேண்டும்' என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல் துறையின் போக்குவரத்துத் துணை ஆணையர் நிலவரஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com