தில்லியில் மலை போல் குவியும் குப்பைகள்: அறிக்கை கேட்கிறது பசுமைத் தீர்ப்பாயம்

தில்லியிலுள்ள பல்வேறு குப்பை கொட்டும் தளங்களில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை கையாள உரிய உள்கட்டமைப்பு

தில்லியிலுள்ள பல்வேறு குப்பை கொட்டும் தளங்களில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை கையாள உரிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்று தில்லி அரசை சாடியுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி), இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது,  தில்லி அரசுக்கு தீர்ப்பாய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
தலைநகரில்  நாளொன்றுக்கு சுமார் 14 ஆயிரம் மெட்ரிக் டன் எடையிலான குப்பைகள் சேருகின்றன. இந்த அளவுக்கு குப்பைகள் சேரும் நிலையில், அவற்றை கையாள்வதற்கு உரிய உள்கட்டமைப்பு வசதிகளையோ, தொழில்நுட்ப வசதிகளையோ தில்லி அரசு ஏற்படுத்தவில்லை.
தில்லியில் காஜிப்பூர், பால்ஸ்வா, ஓக்லா உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பை கொட்டும்  தளங்களில் மலை போல குப்பைகள் குவிந்துள்ளன.  
இவை, காற்று, நீர் மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்த குப்பைகளை கையாள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பது குறித்து தில்லி அரசு அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், நகரிலுள்ள யமுனைக் கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, குப்பைகளில் இருந்து எரிசக்தியை உருவாக்குவது தொடர்பான பணிகளுக்காக ஒரு குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்திருந்தது. மேலும், தில்லியில் கூடுதலாக குப்பை கொட்டும் தளங்களை ஏற்படுத்துவது தொடர்பாக தில்லி அரசுடன் ஆலோசனை நடத்தும்படி மத்திய, தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com