பாலம் அமைக்க தடையின்மைச் சான்றிதழ் நிலுவை: நிதின் கட்கரியிடம் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. நேரில் முறையீடு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்  45-இல் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க தடையின்மைச் சான்றிதழ்

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்  45-இல் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதி கட்கரியிடம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் திங்கள்கிழமை நேரில் முறையிட்டார்.
இது தொடர்பாக தில்லியில் அமைச்சர் நிதி கட்கரியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கே.என். ராமச்சந்திரன்  மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீ  பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை (எண் 45) மீது நான்கு மேம்பாலங்கள் கட்டுவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (என்எச்ஏஐ) இருந்து தடையின்மைச் சான்றிதழ் வர வேண்டியுள்ளது.
இச்சாலை சென்னை நகருக்கு நுழைவு வாயிலாக இருப்பதால், மேம்பாலம் கட்டப்பட்டால் வாகனப் போக்குவரத்து குறைந்துவிடும்.  இந்த நான்கு மேம்பாலங்களுக்கான தடையின்மைச் சான்றிதழில் இரு சான்றிதழ்கள்  எனது ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்படும் மேம்பாலங்களுக்கானவை.  மற்ற இரு பாலங்கள் எனது தொகுதிக்கான நுழைவுச் சாலை அல்லது பிரதான வழக்கமான சாலையாகும்.
அதாவது, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை (எண்: 45) மீதான எல்சி 32,  33 ஆகிய இடங்கள்,  
ஊரப்பாக்கம் பகுதியில் என்எச் 45-இல் எல்சி 36,   சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் என்எச்-45-இல் உள்ள எல்சி 47 ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்க தடையின்மைச் சான்றிதழ் இன்னும் என்எச்ஏஐயிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.
இச்சாலைகள் நாட்டின் இதரப் பகுதிகளை தென் பகுதியுடன் இணைக்கும் சாலைகளாக உள்ளன.  
இதனால்,  மேற்கண்ட இடங்களில் பாலம் அமைப்பதற்கு ஏதுவாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கே.என். ராமச்சந்திரன் எம்.பி.  திங்கள்கிழமை கூறுகையில், "மேம்பாலங்கள் அமைக்க மாநில அரசு தயாராக உள்ளது.  அதற்கான தடையின்மைச் சான்றிதழ் விரைந்து வழங்கப்படுவது அவசியம்.
இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் சந்தித்து மனு அளித்துப் பேசினேன். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார் என்றார் கே.என். ராமச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com