ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் தனியார்மயமாக்க எதிர்ப்பு: தில்லியில் தொடர் உண்ணாவிரதம்; அதிமுக எம்.பி.க்கள்ஆதரவு

நாடு முழுவதும் உள்ள 41 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயாக்க மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து

நாடு முழுவதும் உள்ள 41 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயாக்க மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தினரை செவ்வாய்க்கிழமை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை மற்றும் அதிமுக எம்பிக்கள் சிலர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டில் 41 இடங்களில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் உள்ளன.  இவற்றில்  தமிழகத்தில் மட்டும் ஆவடியில் 3,  திருச்சியில் 2, அரவங்காட்டில் ஒன்று என மொத்தம் ஆறு தளவாடத் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த ராணுவத் தொழிற்சாலைகளை அரசு - தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்த மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இதற்கான நடவடிக்கையை படிப்படியாக மேற்கொள்ள மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து தில்லியில்  ஜூலை 3-ஆம் தேதி முதல் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டத்தில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை,அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவற்றின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை,  நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.குமார்,  மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.  அப்போது, தம்பிதுரை கூறுகையில்,  "திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு ஒரு போதும் ஆதரிக்காது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்'  என்றார்.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் சி.ஸ்ரீகுமார் தினமணியிடம் கூறுகையில்,  "எங்கள் போராட்டத்திற்கு மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள்,  கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் கருணாகரன்,  ஸ்ரீமதி டீச்சர் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.  நாட்டில் உள்ள 41 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் 600 விதமான பொருள்களில் 200 பொருள்களைத் தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்கெனவே அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 31 பொருள்களை தனியார் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இது அமலுக்கு வந்தால் ஆவடியில் உள்ள படைத் துறை உடைத் தொழிற்சாலை கடுமையாகப் பாதிக்கப்படும்.  மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு துறைச் செயலர் சஞ்சய் மித்ராவுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, எங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்துள்ளோம் என்றார் அவர். இந்நிகழ்வில் அகில இந்திய பாதுகாப்புத் துறை சம்மேளனத்தின் தலைவர் எஸ்.என். பாதக், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை சங்கத்தின் தலைவர் சரவணன், துணைத் தலைவர் பாலச்சந்திரன்,  எச்ஏபிபி துணைத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலர் இரணியன் உள்பட உள்பட கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com