கைதாகும்போது உள்ள உரிமைகள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் போலீஸாரால் கைதாகும்போதோ, பிடித்துச் செல்லப்படும்போதோ ஒருவருக்கு உள்ள உரிமைகள் தொடர்பாக, பொது மக்கள்

குற்ற வழக்குகளில் போலீஸாரால் கைதாகும்போதோ, பிடித்துச் செல்லப்படும்போதோ ஒருவருக்கு உள்ள உரிமைகள் தொடர்பாக, பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மத்திய, தில்லி அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுபாஷ் விஜயன் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 22(2)-ஆவது பிரிவின்படி, ஒருவர் கைது செய்யப்படும் போதோ, விசாரணைக்காக பிடித்துச் செல்லப்படும்போதோ 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். இதையே, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 57-ஆவது பிரிவும் வலியுறுத்துகிறது. இதேபோல,  திருப்திகரமான காரணம் இல்லாமல் ஒருவரை கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற உரிமைகள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி,  காவல்துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று அந்த பொது நல  மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் கைதாகும்போதோ, விசாரணைக்காக பிடித்துச் செல்லப்படும்போதோ தங்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதற்கு, பிரதிவாதிகள் (மத்திய, தில்லி அரசுகள்) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதேபோல, கைதான அல்லது விசாரணைக்காக பிடித்துச்  செல்லப்படும் நபர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினர் விவரங்களை அறிந்துகொள்வதற்காக தொலைபேசி உதவி எண்ணை உருவாக்குவது குறித்து தில்லி காவல்துறை ஆணையர்  பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் தில்லி காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com