செம்மரக் கட்டைகள் கடத்த முயற்சி: தில்லி விமான நிலையத்தில் சீனப் பயணி கைது

ரூ.8 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக, தில்லி சர்வதேச விமான நிலையத்தில் சீனப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரூ.8 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக, தில்லி சர்வதேச விமான நிலையத்தில் சீனப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சுங்க துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தில்லி விமான நிலையத்தில் இருந்து சீனாவின் குன்மிங் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவிருந்த அந்த பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 86 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் பையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அழிந்து வரும் ரகங்களாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மரங்களின் விற்பனைக்கு,  சர்வதேச அளவில் தடை உள்ளது. இதேபோல, நமது நாட்டில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பொருளில் ஒன்றாக செம்மரக் கட்டை உள்ளது.
மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால், சீனா, ஜப்பான் மற்றும் இதர கிழக்கு ஆசிய நாடுகளில் செம்மர கட்டைகளுக்கு கிராக்கி உள்ளது.
இதனால், சர்வதேச சந்தையில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் ஒரு கிலோ ரூ.10 ஆயிரம் என்ற அளவில் செம்மரத்துக்கு மதிப்பு உள்ளது. வெளிநாடுகளில் இதைவிட அதிக மதிப்பு உள்ளது.
மற்றொரு சம்பவம்: இதேபோல, ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்றதாக தில்லி விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, 1.5 கிலோ எடையுள்ள தங்க கம்பிகளை "வயர்' போல செய்து, அதனை பையில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கடத்தல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com