முதல்வர் பழனிசாமியுடன் தமிழக  விவசாயிகள் சந்திப்பு

தில்லிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு

தில்லிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நதிகள் இணைப்பு,  விவசாயக் கடன் தள்ளுபடி,  காவிரி மேலாண்மை வாரியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 நாள்களாக தில்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்,  குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தில்லி வந்த தமிழக முதல்வர் பழனிசாமியை தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 30 விவசாயிகள் சந்திக்கச் சென்றனர்.
பின்னர், அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள்  தமிழக விவசாயிகள் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினர்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில்,  "தமிழக விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினோம்.  விவசாயிகள் கடன் தள்ளுபடி விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக
உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.   விவசாயிகளின் பிரச்னைகள் விஷயத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது.  பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை  போராட்டத்தை தில்லியில் தொடர்வோம்' என்றார்.
 இதுகுறித்து தில்லியில் முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது முதல்வர்,  "தமிழக விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இந்த விஷயத்தில் மத்திய அரசின் உதவியைப் பெறவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
விவசாயிகளின நலன் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com