சேலம் உருக்காலை தனியார் மயத்திற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக  வலியுறுத்தியது.

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக  வலியுறுத்தியது.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண்  377-இன் கீழ் சேலம்  தொகுதி அதிமுக உறுப்பினர்  வி.பன்னீர்செல்வம் பேசியதாவது:  
தமிழகத்தின் சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. சேலம் உருக்காலை அதன் உயர் தரமான உருக்குக்கு உலகளவில் புகழ்பெற்றது.  மாநிலத்திற்கான அடையாளமாகவும்,  தமிழக மக்களின் பெருமையாகவும் இருந்து வருகிறது.
 இந்த ஆலை 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது.   நிறைய துணை நிறுவனங்களும் இந்த ஆலையைச் சார்ந்துள்ளன.  
சேலம் உருக்காலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழக அரசும் தனது ஆதரவை அளித்து வருகிறது. எனவே, மத்திய அரசு இந்த ஆலையை தனியார் மயமாக்கும் யோசனையைக் கைவிட வேண்டும். மேலும், நிதி ஆதரவையும் அளிக்க வேண்டும்  என்று கேட்டுக் கொண்டார்.
ஓய்வூதிய நிதி: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.நாகராஜன் விதி எண்  377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை:
ஊழியர்கள் ஓய்வூதியம் திட்டம் 1995-இல் ஓய்வூதிய நிதியில் கூடுதல் நிதியை உறுப்பினர் பங்களிப்பாக  அளிக்க விதிகள் உள்ளன. இந்த டெபாசிட் பணத்திற்கு ஏற்ப உறுப்பினருக்கு ஓய்வூதியம் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்படும்.
அதிகரிக்கப்பட்ட பங்களிப்பை ஏற்குமாறு நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், ஊழியர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ)  வெளியிட்ட சுற்றறிக்கையில் இதற்கு முரண்பாடான விஷயங்கள் உள்ளன.  
எனவே, இந்திய உணவுக் கழகம் போன்ற பல நிறுவனங்களின் அனைத்து தகுதிக்குரிய ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியப் பயன்கள் சென்றடை
வதை உறுதிப்படுத்தும் வகையில் முரண்பாடுகளைக் களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விவசாயிகள் பிரச்னை:  மாநிலங்களவையில்  விவசாயிகள் பிரச்னை தொடர்பாக குறுகிய நேர விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:  
தமிழகத்தில் 70 சதவீதம் மக்கள் விவசாயத்திலும் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.  
வறட்சியின் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பைத் தொடர்ந்து,  தமிழகத்திற்கான உரிய வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்றும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்திற்கு உரிய நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.  இவற்றை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடைமையாகும்.  
அதேபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் மத்திய அரசு பரிசிலீக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com