தில்லி விரைவு ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி: உணவு தயாரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது ரயில்வே

ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி கிடந்த சம்பவத்தையடுத்து, அந்த ரயிலில் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட

ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி கிடந்த சம்பவத்தையடுத்து, அந்த ரயிலில் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரயில்வே ரத்து செய்துவிட்டது.
மேற்குவங்க மாநிலம், ஹெளராவில் இருந்து தில்லிக்கு சென்ற பூர்வா விரைவு ரயிலில் சென்ற பயணி ஒருவர், காய்கறி பிரியாணியை வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த பிரியாணியை சாப்பிட்டதும், அவரது உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. உடனே, அவர் சாப்பிட்ட உணவை பரிசோதித்தபோது, அதில் உயிரிழந்த நிலையில் பல்லி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த பயணிக்கு பிகார் மாநிலம், பக்சாரில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உத்தரப் பிரதேச மாநிலம், முகல்சராயில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பயணி, சுட்டுரையின் மூலம் ரயில்வே அமைச்சகத்துக்கு புகார் அளித்தார். இதையடுத்து, அவரது விவரத்தை ரயில்வே அமைச்சகம் கேட்டுப் பெற்றது. அந்த புகாரை ரயில்வே உணவு தயாரிப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தது. இதேபோல், அந்த பயணியுடன் பயணித்த மேக்னா சின்ஹா என்பவர், சுட்டுரை மூலம் ரயில்வேக்கும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் புகார் அனுப்பி வைத்தார். அந்த புகாருடன், பிரியாணியில் பல்லி கிடந்த காட்சியை புகைப்படம் பிடித்து பதிவேற்றம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஹெளரா-தில்லி இடையேயான பூர்வா விரைவு ரயிலில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே. அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரயில்வே ரத்து செய்தது. இதுகுறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஏ.கே. சக்சேனா, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், " மோசமான உணவு தயாரிப்பு, உணவுக்கு அதிக கட்டணம் வாங்குவதை சகித்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கையை ரயில்வே கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, ஹெளரா-தில்லி இடையேயான பூர்வா விரைவு ரயிலில் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட ஆர்.கே. அசோசியேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரயில்வே ரத்து செய்துள்ளது. இதேபோல், கடந்த 6 மாதங்களில் ஏராளமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 16 நிறுவனங்களுக்கு ரயில்வே தடை விதித்தது' என்றார்.
இதேபோல், சுட்டுரையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட பதிவுகளில், "ரயிலில் உணவு தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை, ஆர்.கே. அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு 2014-ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே. அசோசியேட்ஸ் நிறுவன இணையதளத்தில், "கடந்த 20 ஆண்டுகளாக ரயில்களில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்களில் தயாரிக்கப்படும் உணவுகள், மிகவும் மோசமாக சுகாதாரமற்று இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், தில்லி விரைவு ரயிலில் காய்கறி பிரியாணியில் பல்லி கிடந்தது அதை ஊர்ஜிதம் செய்வது போல் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com