போயஸ் கார்டன் இல்ல மோதல் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபக், தீபா ஆகியோர் இடையே

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபக், தீபா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார்கள் மீது சட்டப்படி விசாரித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளதால் அதற்கு உரிமை கோரி அதிமுக அம்மா கட்சிப் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தரப்பும், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி தரப்பும் தேர்தல் ஆணையத்தில் கடந்த இரு மாதங்களாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சசிகலா தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்கள் அடங்கிய கூடுதல் பிரமாண பத்திரங்கள் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 12) தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் பிரமாண பத்திரங்களை தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்குரைஞர் ராகேஷ் சர்மா ஆகியோர் தாக்கல் செய்தனர்
அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் சார்பில் 1,912 பிரமாணப் பத்திரங்கள், தேனி, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, மதுரை நகர், சேலம் நகர், மத்திய காஞ்சிபுரம், மேற்கு காஞ்சிபுரம், கிழக்கு காஞ்சிபுரம், தஞ்சாவூர், தருமபுரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கடலூர் கிழக்கு, சேலம் உள்பட 17 மாவட்ட அதிமுக கிளைகள் சார்பில் கடந்த மே 22 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை மொத்தம் 3,98,345 பிரமாண பத்திரங்கள் சசிகலா தலைமைக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2,41,345 பிரமாண பத்திரங்களும் அடங்கும்.
இது குறித்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவுக்கு உரிமை கோரி எங்கள் தரப்பு அதிகபட்ச அளவில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. எனவே, இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என்று வலுவாக நம்புகிறோம். சென்னை திரும்பியதும் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசித்து ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்போம்.
"பிரிந்தவர்கள் எப்போது வந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்படுவர்'  என்று ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, பன்னீர்செல்வம் அணியில் இருந்து எல்லோரும் திரும்பி வந்து ஓர் அணியாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கட்சியையும் ஆட்சியையும் வலுவுடன் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்நிலையில், இரு அணிகளும் சேர்வதற்கான பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டு விட்டதாக பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து ஊடகங்கள் மூலம்தான் தெரிய வந்தது. என்ன காரணத்துக்காக அவர் அப்படி தெரிவித்தார் எனப் புரியவில்லை.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, ஜெயலலிதா வழியில் ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அனைத்து அதிமுக தலைவர்கள் கட்சித் தொண்டர்கள் ஆகியோரின் கருத்தும் அதுதான். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சொத்து விவகாரம் தொடர்பாக இரு தனி  நபர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பும் பரஸ்பரம் புகார்கள் அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சகோதர, சகோதரி இடையிலான தனிப்பட்ட சொத்து பிரச்னைக்காக அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பத்திரிகை புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தீபா முன்வைத்த குற்றச்சாட்டு உள்நோக்கத்துடன் சுமத்தப்பட்டுள்ளது. அவரது குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்றார் அமைச்சர் சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com