கழிவுநீர்க் கால்வாய் தூர்வாரும் விவகாரம்: கேஜரிவால் குற்றச்சாட்டுக்கு பிடபிள்யுடி செயலர் பதிலடி

தில்லியில் கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாரும் பணி தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுமத்திய குற்றச்சாட்டுக்கு

தில்லியில் கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாரும் பணி தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பொதுப் பணித் துறை (பிடபிள்யுடி) செயலர் அஸ்வனி குமார் பதில் அளித்துள்ளார்.  அதில் "ஒருவரை ஒருவர் குறை கூறுவதால் பலன் ஏற்படாது' எனத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சில குறிப்பிட்ட கழிவுநீர்க் கால்வாய்களின் தூர்வாரும் பணியை நேரில் சென்று மேற்பார்வையிடுமாறு பொதுப் பணித் துறைச் செயலர் அஸ்வனி குமாருக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,  தில்லி அரசின் தலைமைச் செயலர் எம்.எம். குட்டிக்கு முதல்வர் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், "பருவமழைக் காலம் தொடங்குவதை ஒட்டி கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாரவும், அப்பணிகளை நேரில் மேற்பார்வையிடுமாறும் பொதுப் பணித் துறைச் செயலர் அஸ்வனி குமாரிடம் குறிப்பிட்டு அறிவுறுத்தியிருந்தேன். ஆனால், எனது உத்தரவை அவர் நடைமுறைப்படுத்தாமல் வெளிப்படையாக மீறியுள்ளார்.  
தில்லி மக்களின் சுகாதாரம் இடர்பாட்டில் இருக்கும் போது  அவர் தனது குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வர மறுக்கிறார்.  தனது கடைமையில் இருந்து தவறியதற்காக அஸ்வனி குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும், கிழக்கு, வடக்கு தில்லி மாநகராட்சி மேயர்கள் பட்டியலிட்ட அனைத்து கழிவுநீர்க் கால்வாய்களையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 18)  அவர் நேரில் சென்று பார்வையிடுவதையும்,  அனைத்து வடிகால்களும் தூர்வாரப்படுவதையும் அவர்  உறுதி செய்ய வேண்டும். அவரது இளநிலை அதிகாரிகள் மேற்பார்வையிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது'  என்று அதில் கேஜரிவால்  குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் தில்லி பொதுப் பணித் துறைச் செயலர் அஸ்வனி குமார் கூறியதாவது:
பருவமழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகளைப் பொருத்தமட்டில் ஒருவர் மற்றொருவர் மீது குறை கூறுவதால் எந்தவிதப் பயனும் இல்லை. தொடர்ந்து நடைபெறும் வடிகால் தூர்வாரும் பணிகள் மதிப்பீடு செய்யப்படும். இப்பணியை மேற்கொள்வதில்  பொதுப் பணித் துறை,  உள்ளாட்சி அமைப்புகள் உள்பட அனைத்துத் துறைகளும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது அவசியமாகும்.  எதிர்மறை போக்கும், பூசல் மனோபாவமும் இதுபோன்ற சவால் மிகுந்த பணிகளில் சரியானதாக  இருக்காது. கழிவுநீர்க் கால்வாய் அமைப்பு முறை குறித்த உண்மை நிலவரம் தொடர்பான அறிக்கையை முதல்வர் கேஜரிவாலிடம் சமர்ப்பிக்க உள்ளேன் என்றார் அவர்.
தில்லி ரவுஸ் அவென்யூவில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ரூ.28 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என  அண்மையில் தில்லி பொதுப் பணித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  இந்நிலையில், தில்லி பொதுப் பணித் துறை செயலர் மீது கேஜரிவால் புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி அரசுக்கும், அதிகாரவர்க்கத்திற்கும் இடையே கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்தது. குறிப்பாக, 2015, டிசம்பர் மாதத்தில் தில்லி அரசில் பணியாற்றி வந்த இரு "டேனிக்ஸ்' பிரிவு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, அரசு உயரதிகாரிகள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் பணியிடை  நீக்கம் செல்லத்தக்கதல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தும் இப்போராட்டத்தில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் முகநூல் நேரலை நிகழ்ச்சிக்கான அனுமதியை அளிக்க மறுத்ததையடுத்து தில்லி தகவல் மற்றும் விளம்பர இயக்ககத்தின் இயக்குநரை நீக்க மணீஷ் சிசோடியா கோரியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com