கழிவுநீர் கால்வாய்கள் விவகாரம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தில்லியில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், நகரிலுள்ள கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளதா? என்று தில்லி அரசுக்கும் 3 மாநகராட்சிகளுக்கும் உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

தில்லியில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், நகரிலுள்ள கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளதா? என்று தில்லி அரசுக்கும் 3 மாநகராட்சிகளுக்கும் உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தில்லியில் மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக, ஊடகமொன்றில் படங்களுடன் செய்தி வெளியானது.
நகரில் ஒரு சில கால்வாய்களே தூர்வாரப்பட்டிருப்பதாகவும், அதிலும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் கால்வாய்களின் அருகிலேயே போடப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த செய்தியை, பொதுநல மனுவாக தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து, நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, தில்லி அரசுக்கும், 3 மாநகராட்சிகளுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தில்லியில் உள்ள சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளதா? அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? தங்களது பராமரிப்பில் உள்ள கழிவுநீர் கால்வாய்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து வரும் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தில்லி அரசுக்கும், 3 மாநகராட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பணிகள் தொடக்கம்: முன்னதாக, தில்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயில் பல ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தாவிட்டால், பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, அந்த கால்வாயை தூர்வாரும் பணியை பொதுப் பணித் துறையினர் திங்கள்கிழமை தொடங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com